முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் வெரிகோஸ் வெய்ன் வந்தால் ஆபத்தா..? மருத்துவரின் பதில்..!

கர்ப்ப காலத்தில் வெரிகோஸ் வெய்ன் வந்தால் ஆபத்தா..? மருத்துவரின் பதில்..!

பெண்குயின் கார்னர் 85

பெண்குயின் கார்னர் 85

பெண்குயின் கார்னர் 85 : கர்ப்ப காலத்தில் வெரிகோஸ் வெய்ன் வந்தால் ஆபத்தா? டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா தரும் விளக்கத்தை பார்க்கலாம்...

  • Last Updated :
  • Tamil Nadu, India

காவியா பி பி ஓவில் பணிபுரிகிறார்.

தன்னுடைய முதல் கர்ப்பத்தின் ஆறாவது மாதத்தில் இருக்கிறார். காவ்யா தன் கணவருடன் செக்கப்புக்காக வந்திருந்தார்.

முகத்தில் லேசான பதட்டம் தெரிந்தது.

"என்ன ஆயிற்று காவியா?! குழந்தையின் அசைவு நன்றாக தெரிகிறதா?" என்று கேட்டேன்.

"குழந்தையின் அசைவு நன்றாக இருக்கிறது டாக்டர்!. ஆனால் நேற்றுதான் கவனித்தேன். என்னுடைய இரண்டு கால்களிலும் நீல நிறத்தில் நரம்பு சுருண்டு உள்ளது. வேலை முடிக்கும் பொழுது காலில் வலி மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக நரம்பு சுருண்டு உள்ள இடங்களில் வலி அதிகமாக இருக்கிறது" என்றார் காவ்யா.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு காரணம் என்ன?

என் பதில்:

கர்ப்ப காலத்தில் சுரக்கும் அதிகமான ஹார்மோன்களால் உடலின் எல்லா இடத்திலும் உள்ள ரத்த நாளங்கள் குறிப்பாக சிரைகள் தளர்ச்சி அடைகின்றன. அத்துடன் ரத்தத்தின் அளவு 3 மடங்கு வரை அதிகமாகிறது. உடல் எடை அதிகரிப்பதோடு, குழந்தையினுடைய எடையும், அதிகரித்துக் கொண்டே வருவது இந்த ரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை மேலும் அதிகமாக்கும். கர்ப்ப காலத்தில் இயக்கம் பொதுவாகவே மற்ற சமயங்களில் இருப்பதை விட குறைந்து விடுகிறது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் ரத்தம் கால்களில் இருந்து இருதயத்தை நோக்கி புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து செல்வது தாமதமாகும். அதனால் ரத்த நாளங்கள் குறிப்பாக சிரைகள் (வெயின்ஸ்) லேசாக தளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். அவ்வாறு தளர்ச்சி அடையக்கூடிய சிரைகள் , லேசான நீல நிறத்தில் தோலுக்கடியில் புலப்படும். பொதுவாக அதில் வலியோ அல்லது வீக்கமோ இல்லாவிட்டால் பெரிதாக ஒன்றும் பயப்பட தேவையில்லை.

கர்ப்ப காலத்தில் உட்காரும் போது கால்களை முடிந்த அளவு தொங்கவிடாமல் , அரை மணிக்கு ஒரு முறை எழுந்து நடப்பது நடப்பது, கால்களை, குறிப்பாக பாதங்களை சிறிது உயரத்தில் வைத்திருப்பது போன்ற ஒரு சில பயிற்சிகளை செய்தாலே இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைக்கலாம். வலி அதிகமாக இருப்பவர்கள் கால்களில் கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் ஸ்டாக்கிங்ஸ் என்று சொல்லக்கூடிய இறுக்கமான சாக்ஸ் போன்ற உடைகளை அணியும் பொழுதும் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம். லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம். படுத்திருக்கும் போதும் இடது பக்கமாக படுப்பதும் நல்லது.

இவ்வாறு பல்வேறு வழக்கங்களை நாம் கடைப்பிடித்தாலும் கூட குழந்தை எடை அதிகரிக்க அதிகரிக்க இந்த தளர்ந்த சிரை பிரச்சனையும் அதிகரிக்கலாம். பிரசவ காலம் வரை இது அதிகரித்துக் கொண்டே போகலாம். பெரும்பாலும் பிரசவமான ஒன்று இரண்டு மாதங்களுக்குள், வெளிப்படையாக தெரிந்த சிரைகள் அனைத்தும் மறைந்து மீண்டும் பழைய நிலையை அடைந்து விடும். தாய்க்கோ அல்லது குழந்தைக்கு பெரிதாக ஒன்றும் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு இல்லை.

Also Read |  பெண்குயின் கார்னர் 84 : கர்ப்ப காலத்தில் தோல் கருமை, மங்குகள் ஏற்பட என்ன காரணம்..? இதற்கான சிகிச்சை என்ன..? மருத்துவரின் விளக்கம்..!

ஏற்கனவே இது போன்ற தளர்ந்த சிரைகள் ( வெரிகோஸ் வெயின்) பிரச்சனை இருப்பவர்களுக்கு கர்ப்ப காலத்தில் அவை அதிகமாகலாம். எனவே கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்து அவர்கள் ஸ்டாக்கிங்ஸ் எனப்படும் கர்ப்ப காலத்தில் அணியக்கூடிய இறுக்கமான காலுறைகளை அணிந்து கொள்வது நல்லது.

மேலும் ரத்த நாள சிறப்பு மருத்துவரின் ஆலோசனையையும் பெற்று தங்களுடைய கர்ப்பகால வாழ்க்கை முறையை அதற்கு ஏற்றார் போல மாற்றி அமைத்துக் கொள்ளும் பொழுது பெரும்பாலும் ரத்த நாளங்களில் இருந்து வரக்கூடிய சிக்கல்களை தவிர்க்கலாம்.

கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Pregnancy care, Pregnancy changes, பெண்குயின் கார்னர்