முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் முதுகு வலிக்கு என்ன காரணம்..? இது நார்மல் தானா..? மருத்துவரின் பதில்..!

கர்ப்ப காலத்தில் முதுகு வலிக்கு என்ன காரணம்..? இது நார்மல் தானா..? மருத்துவரின் பதில்..!

பெண்குயின் கார்னர் 83

பெண்குயின் கார்னர் 83

பெண்குயின் கார்னர் 83 : கர்ப்ப காலத்தில் ஏன் முதுகுவலி ஏற்படுகிறது. டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா தரும் விளக்கத்தை பார்க்கலாம்..

 • Last Updated :
 • Tamil Nadu, India

நிஷா வங்கியில் காசாளராக பணிபுரிகிறார். அவர் தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். அன்று தன் தாயுடன் மருத்துவமனைக்கு சந்திக்க வந்திருந்தார்.

இரண்டு நாட்களாகவே முதுகில் வலி இருப்பதாகவும் அன்று அலுவலகம் சென்று சிறிது நேரம் கூட பணிபுரிய முடியவில்லை என்றும், எனவே உடனடி விடுப்பு எடுத்து வந்திருப்பதாகவும் கூறினார்.

"எலும்பில் எனக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமா டாக்டர்! ? "என்று கேட்டார்.

நிஷாவிற்கு பரிசோதனை செய்தேன். நான்காவது மாதத்திற்கான வளர்ச்சி சரியாக இருந்தது. அவருடைய முதுகை சோதித்து பார்த்தபோது ஒரு குறிப்பிட்ட எந்த இடத்திலும் வீக்கமோ , வலியோ இல்லை.

"நிஷா ஏற்கனவே உங்களுக்கு முதுகில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கிறதா?" என்று கேட்டேன்

"இதுவரை ஏதும் பிரச்சினைகள் இல்லை. முதுகெலும்பு பொருத்தவரை எதற்காகவும் சிகிச்சை எடுத்ததில்லை" என்றும் கூறினார்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலி வருவதற்கான காரணங்கள்:

 • கர்ப்ப காலத்தில் முதுகு வலி மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். பல பெண்களுக்கு இது ஏற்படலாம். குறிப்பாக அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யக்கூடிய வேலையில் இருக்கும் பெண்களுக்கு அதிகமாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • கர்ப்பகால ஹார்மோன்களால் தசைநார்கள் தளர்ந்து விடுவதால் முதுகெலும்பு இணைப்பு மூட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் முதுகு வலிக்கு காரணமாகின்றன.
 • விட்டமின் டி3 மற்றும் கால்சியம் குறைவு ஏற்பட்டாலும் முதுகு வலி கால் வலி போன்றவை ஏற்படலாம்.
 • வளரும் குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க லேசாக முதுகெலும்பு பின்புறம் நோக்கி வளைவது மிகவும் பொதுவானதாகவும். இதை லம்பார் லார்டோஸிஸ்(. Lumber lordosis) என்று கூறுவோம்.
 • கர்ப்பம் மற்றும் குழந்தையின் வளர்ச்சியால் பொதுவாகவே
 • உடல் எடை அதிகரிப்பது

 • பல மணி நேரம் ஒரே மாதிரி உட்கார்ந்து வேலை செய்வதால்.
 • ஏற்கனவே முதுகு எலும்பில் பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிகரிக்கும்.

இந்த முதுகு வலியோடு காய்ச்சல் ரத்தக்கசிவு ,நீர்க்கசிவு, சிறுநீர் கழிப்பதில் வலி போன்றவையும் சேர்ந்திருந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நலம்.

Also Read | பெண்குயின் கார்னர் 82 : கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உண்டாவது ஏன்..? மருத்துவரின் விளக்கம்.!

எப்படி சமாளிக்கலாம்?

 • முதலில் கர்ப்ப காலத்தில் முதுகு வலி வருவது பல கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 • கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்
 • கர்ப்ப காலத்தில் செய்யக்கூடிய குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை செய்யலாம்.

 • உட்கார்ந்து பணிபுரியும் வேலையில் இருப்பவர்கள் தகுந்த வசதி உள்ள நாற்காலியை உபயோகப்படுத்தலாம்.
 • உட்காரும்போது நிமிர்ந்து உட்காருவது முதுகை நேராக வைத்துக் கொள்வது நிற்பது போன்றவையும் முதுகு வலி வருவதை குறைக்கும்.
 • உறங்கும்போது பக்கவாட்டில் படுத்து உறங்குவதும் இரண்டு புறங்களிலும் தலையணைகளை வைத்து அதன் மீது லேசாக சாய்ந்து உறங்குவதும் வலியை குறைக்கும்.
 • செருப்புகளில் குதிகால் உயர்ந்த செருப்புகளை தவிர்த்தல் நலம்.

 • மிகவும் வலி இருக்கும் சமயங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். குறைந்தபட்ச வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் களிம்புகளும் பயன்படுத்தலாம்.

இப்போது நிஷா "டாக்டர்! நீங்க சொன்ன எல்லா குறிப்புகளையும் நான் பயன்படுத்தி பார்க்கிறேன். எனக்கு பிரச்சனை இல்லைங்கறது புரிஞ்சிருச்சு. ரொம்ப நன்றி" என்று கூறி விடைபெற்றார்.

top videos

  கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

  First published:

  Tags: Back pain, Pregnancy care, பெண்குயின் கார்னர்