ராகவி தன்னுடைய தாயுடன் மருத்துவமனையில் காத்திருந்தார். ராகவி தன்னுடைய முதல் கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் இருக்கிறார். அதாவது 20 வாரங்கள் ஆகியுள்ளது.
தன் தோழிகள் மூலமாக, கர்ப்பம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதில் ஐந்தாவது மாதத்தில் குழந்தை அசைவு தெரியும் என்று புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் இன்றுவரை அவரால் குழந்தையின் அசைவை உணர முடியவில்லை. அதை தெரிந்துகொள்ளவே இன்று வந்திருக்கிறார்.
என் பதில்:
இது பலருக்கு வரக்கூடிய பொதுவான சந்தேகம் தான். முதல் குழந்தையின் அசைவை உணர 20 வாரங்களில் இருந்து, சில சமயங்களில் 24 வாரங்கள் வரை கூட காத்திருக்க வேண்டி இருக்கும். அதே இரண்டாவது குழந்தையின் அசைவு 16 வாரங்களில் இருந்தே தெரியத்துவங்கும். ஆனால் இதற்கான காரணம் ஐந்து மாதத்தில் குழந்தையின் எடை 300 கிராம் இருந்து 400 கிராமுக்குள் தான் இருக்கும்.
அதனுடைய அசைவு கருப்பைக்குள் இருக்கும் பனிக்குட நீரையும், கருப்பையின் தடிமனான சுவரையும் தாண்டி, தாயினுடைய வயிற்று தசைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது தான், தாயால் அதை உணர முடியும். தாயின் வயிற்று தசைகள் முதல் கர்ப்பத்தில் நன்கு உறுதியாக இருப்பதால் ஆறு மாதங்கள் வரை கூட குழந்தை அசைவை உணர காத்திருக்க வேண்டும்.
இரண்டாவது கர்ப்பத்தில் வயிற்று தசைகள் பலவீனம் அடைந்து விடுவதால் தாய்க்கு நான்காவது மாதத்தில் இருந்து குழந்தையினுடைய அசைவு தெரிவதற்கான வாய்ப்பு உண்டு. இது மிக மிக இயல்பானது. எனவே பயப்படத் தேவையில்லை. எனவே ஐந்து மாதங்கள் வரை ஸ்கேன் மூலமாக மட்டுமே கருவின் துடிப்பையும் அசைவையும் காணமுடியும். அதற்குப் பிறகு தாயே உணர்ந்து கொள்ள முடியும்.
ஒரு சிலருக்கு நஞ்சுக்கொடி கருப்பையின் முன் புறத்தில் இருந்தாலும் பனிக்குட நீரின் அளவு சிறிது அதிகமாக இருந்தாலும் குழந்தை அசைவை உணர்வதற்கு சிறிது தாமதமாகலாம். சில சமயங்களில் கருவின் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் வளர்ச்சி குறைந்து துடிப்பு தெரியாமல் இருக்கலாம். அசைவு உணரப்படாமல் போகலாம்.
Also Read | கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் வருவது ஏன்..? மருத்துவர் தரும் விளக்கம்..!
ராகவியை ஸ்கேன் மூலம் பரிசோதித்து கருவினுடைய அசைவையும் கருவினுடைய இருதய துடிப்பையும் உறுதி செய்தேன். குழந்தையினுடைய அசைவு நன்றாக இருக்கும் போதும் தன்னால் உணர முடியவில்லை என்பதை புரிந்து கொண்டார் . குழந்தை இன்னும் சிறிது எடை கூடி , இன்னும் ஒன்று இரண்டு மாதங்கள் அல்லது வாரங்களில் குழந்தையினுடைய அசைவு ஒரு துடிப்பை போல உணர ஆரம்பிப்பீர்கள் என்று கூறினேன்.
அதுபோலவே இரண்டு வாரங்கள் கழித்து மிகவும் மகிழ்ச்சியுடன் ராகவி தொலைபேசியில் செய்தி அனுப்பியிருந்தார். குழந்தையினுடைய அசைவை உணர தொடங்கி விட்டதாகவும் ,மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். மகிழ்ச்சியுடன் நன்றி என்று முடித்திருந்தார்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy, Pregnancy changes, Pregnancy Symptoms, பெண்குயின் கார்னர்