முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் தோல் கருமை, மங்குகள் ஏற்பட என்ன காரணம்..? இதற்கான சிகிச்சை என்ன..? மருத்துவரின் விளக்கம்..!

கர்ப்ப காலத்தில் தோல் கருமை, மங்குகள் ஏற்பட என்ன காரணம்..? இதற்கான சிகிச்சை என்ன..? மருத்துவரின் விளக்கம்..!

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 84 : கர்ப்ப காலத்தில் தோல் கருமை . மங்குகள் ஏற்பட காரணம் என்ன? டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா தரும் விளக்கத்தை பார்க்கலாம்...

 • Last Updated :
 • Tamil Nadu, India

பவித்ரா அன்று தன் கணவருடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். பவித்ரா அரசு பணியில் இருக்கிறார்.

அவர் தன்னுடைய முதல் கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் இருக்கிறார்.

முகத்தில் கவலை அப்பி இருந்தது. பவித்ரா ரோஜா நிறத்தில் இருப்பார். இரண்டு மூன்று நாட்களாக முகத்தில் லேசாக கருமை படர்வதை கவனித்திருக்கிறார் . வயிற்றிலும் லேசாக கருமை படர்ந்து இருக்கிறது. அதுபோலவே உடலில் வேறு சில இடங்களிலும் கவனித்திருக்கிறார். தனக்கு ஏதோ நோய் ஏற்பட்டு விட்டதோ? அல்லது விட்டமின் குறைபாடா? எதனால் இவ்வாறு ஆகிறது என்று புரியாமல் மிகவும் மன வருத்தம் உண்டாகி விட்டது.

கர்ப்ப காலத்தில் ஒரு சிலருக்கு தோலில் இது போன்ற கருப்பு திட்டுகள்- மங்குகள் உருவாகலாம். இது நோயல்ல. அது கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் ஒன்றாகும்.

எல்லா மாற்றங்களும் கர்ப்ப காலத்தில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களால் ஏற்படுகின்றது.

மெலனின் என்பது நம்முடைய தோல், முடி மற்றும் கண்களுக்கு நிறத்தை தரக்கூடிய மெலனின் நிறமி. இந்நிறமி ( pigment) கர்ப்ப காலத்தில் தற்காலிகமாக அதிகமாக சுரப்பதால் ஏற்படக்கூடிய மாற்றமே இது. மெலடோனின் அதிகமாக சுரக்க சுரக்க தோலில் கருமை படருகிறது. குறிப்பாக கன்னங்களில் பட்டர்பிளை போல கருமை ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படலாம். மார்பிலும் வயிற்றிலும் அது போன்ற கருமை நிற திட்டுகள் தோன்றலாம்.

இதை கர்ப்ப கால கருமை மலாஸ்மா( melasma) என்று கூறுவர். அல்லது பிரக்னன்சி மாஸ்க் , ( mask of pregnancy) கர்ப்பகால முககவசம் என்றும் கூறலாம். ஏனெனில் குறிப்பாக உதடு கன்னம் தாடை மூக்கு போன்ற இடங்களில் மட்டுமே இந்த திட்டுத்திட்டான கருப்பு நிறத்தை அதிகமாக காணலாம். மேலும் வியர்வை அதிகமாக அல்லது உராய்வு ஏற்படக்கூடிய இடத்திலும் இந்த கருமை அதிகமாக இருக்கலாம்.

மற்ற இடங்களில் குறிப்பாக வயிற்றில் மேலிருந்து கீழாக கருப்பு நிற கோடு போன்று கருமை நிறம் படர்வதை காணலாம். இதற்கு லீனியா நிகரா( linea nigra) என்று கூறுவர் இதுவும் இந்த மெலனின் கூடுதலாக சுரப்பதால் ஏற்படும் மாற்றமே ஆகும். பெரும்பாலும் பிரசவத்திற்கு பல மாதங்களுக்கு பிறகு முழுமையாக மறைய விட்டாலும் கூட மங்கிவிடும். ஓரளவு கர்ப்ப காலத்திற்கு முந்தைய நிலையை அடையலாம்.

Also Read | பெண்குயின் கார்னர் 83 : கர்ப்ப காலத்தில் முதுகு வலிக்கு என்ன காரணம்..? இது நார்மல் தானா..? மருத்துவரின் பதில்..!

பொதுவாக இது பரம்பரையாக வரக்கூடிய மாற்றமாகும். ஒரு சிலருக்கு அதிகமாகவும் ஒரு சிலருக்கு லேசாகவும் ஏற்படும். ஒரு சிலருக்கு எந்த மாற்றங்களுமே ஏற்படுவதில்லை.

இதற்கென்று தனியாக எந்த மருத்துவமும் தேவையில்லை. இவ்வாறு கர்ப்ப காலத்தில் தோலில் கருமை நிறம் கூடுவது இயல்பானது என்பதை புரிந்து கொண்டாலே பிரச்சனை இல்லை.

இதற்கு ஏதாவது மருத்துவம் இருக்கிறதா அல்லது இதை எவ்வாறு தடுப்பது?

பொதுவாக இந்த கருமைப்படர்வது பிரசவத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும் சிலருக்கு முழுமையாக மறைந்து விடலாம். குறிப்பாக சிலவற்றை கட்டாயமாக செய்யக்கூடாது . அவை என்ன?

 • பெண்கள் முடிந்தவரை அதிகமான வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
 • ஏராளமான மேக்கப் சாதனங்களை உபயோகப்படுத்துவதையும் ப்ளீச்சிங் போன்ற சிகிச்சைகளையும் செய்யக்கூடாது
 • வெளியே செல்லும் பொழுது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் சூரிய தடை கிரீம்களை உபயோகப்படுத்த வேண்டும்.
 • முடிந்தவரை முழுமையாக உடலை மூடும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் .
 • முகத்திலும் வெயில் படாத வண்ணம் மூடிக்கொள்ளலாம்.

இதுபோல சிலவற்றை செய்வதன் மூலம் மங்கு ஏற்படுவதைக் குறைக்கலாம்.

ஒரு சிலருக்கு அப்படியே இந்த மங்குகள் தங்கி விடுவதும் உண்டு அவர்கள் தகுந்த தோல் மருத்துவரை சந்தித்து மங்குகளை குறைப்பதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

எனவே  “பவித்ரா உங்களுக்கு வந்திருக்கும் இந்த மாற்றம் மிக மிக பொதுவாக கர்ப்பிணி பெண்களில் காணப்படக்கூடிய மாற்றமே. பதட்டம் தேவையில்லை ஏற்றுக் கொள்ளுங்கள்"

என்று கூறினேன்.

" நன்றாக மனதில் பதியவைத்து விட்டீர்கள் டாக்டர்! நாங்கள் பேப்பருக்கு சீல் வைப்பது போல என்னுடைய குழந்தை எனக்கு வைக்கும் சீல் என்று நினைத்துக் கொள்கிறேன் "என்று சிரித்துக் கொண்டே ,மிக்க நன்றி! என்று கூறி விடைபெற்றார் பவித்ரா.

top videos

  கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

  First published:

  Tags: Pregnancy care, Pregnancy changes, Skincare, பெண்குயின் கார்னர்