முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி இதயத்தை எப்படி பாதிக்கிறது..? மரணத்தை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்.!

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி இதயத்தை எப்படி பாதிக்கிறது..? மரணத்தை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்.!

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

ஒரு தனி நபர் உடற்பயிற்சி திட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நிபுணர்களிடம் சென்று தங்களுக்கு இதய ஆபத்து இருக்கிறதா என ஸ்கிரீனிங் செய்து கொள்ள வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலமாக ஜிம்மில் ஏற்பட்டு வரும் ஹார்ட் அட்டாக் மரணங்கள் நம்மிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. ஹார்ட்அட்டாக்கிற்கும் ஜிம் டைமிற்கும் இடையே தொடர்பு உள்ளதா.? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..

உங்கள் இதயம் எவ்வளவு ஒர்க்அவுட்களை தாங்கும் என்பதை அறியாமல் ஜிம்மிற்கு செல்ல வேண்டாம். இதயத்தின் உடற்பயிற்சி திறன் தெரியாத நிலையில், அதிகப்படியாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். எவரும் தங்களின் அதிகபட்ச ஹார்ட் ரேட்டில் 80%-ஐ தாண்டக்கூடாது. அப்படி தாண்டினால் Red zone-ஆக கருதப்படும். இந்நிலை ஹார்ட் அட்டாக் அபாயத்தை அதிகரிப்பதாக கூறுகிறார்கள்.

பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் தீபக் பூரி பேசுகையில், ஒரு தனி நபர் தனது உடல்நிலையை மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்யாமல், ஜிம் கலாச்சாரத்தால் ஊக்குவிக்கப்பட்டு அதிகப்படியான உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது என்கிறார். ஆரோக்கியமற்ற உணவுகளும் கூட இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் கூட இதய நோயால் மரணிக்கின்றனர். வாரத்தில் 5 நாட்கள், 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதயநோய் அபாயம் 59% குறைவதாக ஆராய்ச்சி காட்டுகிறது, இதுவே போதுமானது.

ஸ்கிரீனிங் என்பது ஏற்கனவே இருக்கும் இதய நோய்களுக்கு மட்டுமல்ல, தீவிர பயிற்சிகளில் ஈடுபடும் முன் இதயநிலையில் அசாதாரணமான மாற்றங்கள் அல்லது பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை சரி பார்க்கவும் செய்ய வேண்டும் என்கிறார்.

அதிகப்படியான பிசிக்கல் ஆக்டிவிட்டி எவ்வாறு தீங்கு விளைவிக்கும்?

உடற்பயிற்சிகளை மிதமாக செய்யும் போது அவை பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளது. ஆனால் அவற்றை அதிகமாக செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அன்றாட நடவடிக்கைகளை செய்ய இயலாமை, சோர்வு காரணமாக நீண்ட நேரம் ஓய்வு தேவைப்படுவது, தூங்குவதில் சிக்கல், தசைகள் வலி, மனச்சோர்வு, ஊக்கமின்மை, மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்படலாம். இவை gym weariness என குறிப்பிடப்படுகின்றன. அதே போல சில நாட்கள் அதிகம் ஒர்க்கவுட்ஸ் செய்ய முடியாமல் போவது, இலக்கை அடைய முடியாத குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தலாம். சிலர் உடல் முடியாத போதும் கூட வழக்கம் போல தீவிர பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.

கார்டியாக் மரணங்கள்:

ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து ஏற்படும் இறப்புகளின் விகிதம் சுமார் 0.001 முதல் 0.002%-ஆக இருக்கிறது. இதில் 95% கடும் பிசிக்கல் ஆக்டிவிட்டிக்கு பிறகு ஏற்பட்ட திடீர் கார்டியாக் மரணங்கள் ஆகும். மிகவும் பொதுவான காரணம் கார்டியோமயோபதி ஆகும். இந்த கண்டிஷன் இதயத்திற்கு ரத்தத்தை பம்ப் செய்வதை கடினமாக்குகிறது மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

இதனால் ஆண்டுக்கு 80% இறப்புகள் ஏற்படுகின்றன. மற்ற நன்கு அறியப்பட்ட காரணங்களில் கரோனரி தமனி நோய் மற்றும் அரித்மியாஸ் அடக்கம். அடிப்படை இதயப் பிரச்சனைகள் உள்ள சாதாரண மக்களிலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற சிக்கல்களை கொண்ட இதய நோயாளிகளிடமும் தீவிரமான உடற்பயிற்சிகளால் மாரடைப்பு ஏற்படுவதை கண்டிருக்கிறோம். இவர்கள் சிக்கல்களை அறியாமல் அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகளை மேற்கொண்டனர். ஒரு நபர் அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்யும் போது, குறிப்பாக குளிர்காலத்தில் இந்த சிக்கல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. குளிர் காலத்தில் தமனிகள் சுருங்குவதால் உடலின் வெப்பநிலையை பராமரிக்க இதயம் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

அதிகப்படியான உடல் செயல்பாடு என்பது எது.?

WHO கூற்றுப்படி ஒரு அடல்ட், வாரத்திற்கு சுமார் 150-300 நிமிடங்கள் Moderate intensity பிசிக்கல் ஆக்டிவிட்டி அல்லது 75-150 நிமிடங்கள் High intensity பிசிக்கல் ஆக்டிவிட்டியில் ஈடுபடலாம். ஜிம்களில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்யக்கூடிய Maximum possible heart rate-ல் 50 முதல் 60% வரை மட்டுமே செய்ய வேண்டும். ஆவரேஜ் ரெஸ்ட்டிங் ஹார்ட் ரேட் என்பது 60 - 100 வரை இருக்கும். மிகவும் ஃபிட்டான நபர்களுக்கு, இது நிமிடத்திற்கு 40 - 50 பீட்ஸ்கள் வரை இருக்கும். அதிகபட்ச ரேட் வயதை அடிப்படையாகக் கொண்டது, 220-லிருந்து கழிக்கப்படும். எனவே 50 வயதுடைய ஒருவருக்கு அதிகபட்ச இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 220 மைனஸ் 50 அல்லது 170 பீட்ஸ் இருக்கும்.

கருத்தில் கொள்ள வேண்டியவை...

ஒர்க்கவுட் முறையை தேர்வு செய்யும் முன் ஒருவர் தனது Range of motion-ஐ மதிப்பிடலாம். கர்ப்பம் மற்றும் பெண்களில் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். மற்றொரு காரணி ஊட்டச்சத்து நிலை. ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் போது டிஹைட்ரேஷன், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள், அதிக எடை இழப்பு, ஹைபோடென்ஷன், குறைந்த ரத்த சர்க்கரை அளவுகள், தசைப்பிடிப்பு மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஆகியவற்றைத் தடுக்க கவனம் செலுத்துவது முக்கியமானது.

சுகாதார மதிப்பீடு..

ஒரு தனி நபர் உடற்பயிற்சி திட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நிபுணர்களிடம் சென்று தங்களுக்கு இதய ஆபத்து இருக்கிறதா என ஸ்கிரீனிங் செய்து கொள்ள வேண்டும். இந்த டெஸ்ட் பிஎம்ஐ, உயரம், எடை, இடுப்பு சுற்றளவு, துடிப்பு விகிதம், ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் செறிவு, ரத்த சர்க்கரை மற்றும் ஹீமோகுளோபின் மதிப்பீட்டை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

ஒரு தனிநபருக்கு இதய நோய் சார்ந்த குடும்ப வரலாறு இருந்தால் அல்லது ஸ்கிரீனிங்கில் இதய நோய் அபாயம் வெளிப்பட்டால் ECG, 2D ECHO மற்றும் TMT பரிந்துரைக்கப்படும். உடற்பயிற்சிக்கு பின் சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி, இடது தோள்பட்டையில் வலி, தொண்டை வலி மற்றும் முதுகுவலி இருந்தால் புறக்கணிக்க கூடாது. தவிர அதிக சோர்வு, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி, பார்வை மங்கல், அதிக எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அதற்கு போதுமான உணவு சாப்பிடாதது காரணமாகலாம்.

Also Read | உயிரிழப்பை அதிகரிக்கும் ’சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ .. இதன் அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

எப்போது ஒர்க்கவுட்ஸ் செய்தாலும் வார்ம்-அப் உடன் தொடங்கி, உச்ச செயல்திறனை அடைந்தவுடன், சோர்வு அடையும் வரை வொர்க்அவுட்டை தொடரலாம். பின் மெதுவாக சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். டார்கெட் ஹார்ட் ரேட்டை அடையும் வரை மீண்டும் மீண்டும் செய்யலாம். எனினும் செயல்முறையின் போது அசௌகரியத்தை அனுபவித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். தவிர உங்கள் முழு உடற்பயிற்சி திட்டமும் உயர் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.

இளைஞர்களுக்கு இதய சிக்கல்கள் ஏற்படுவது ஏன்.?

top videos

    ஆரோக்கியமற்ற மற்றும் உட்கார்ந்தே இருக்க கூடிய வாழ்க்கை முறை, புகை மற்றும் மது பழக்கம், அதிகரித்த மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இவை காரணமாக இதயம் சார்ந்த நோய்களின் அபாயம் இளைஞர்களுக்கு அதிகரித்துள்ளது. தவிர நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் இதயத்திற்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

    First published:

    Tags: Heart disease, Heart Failure, Heart health, Workout