முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி..

Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி..

மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி

மாங்காயை அப்படியே உப்பு மிளகாய் தூள் போட்டு  சாப்பிடுவோம் அல்லது மாங்காய் சாம்பார் செய்து சாப்பிடுவோம். ஆனால், இந்த தமிழ் புத்தாண்டுக்கு மாங்காய் பச்சடியை முயற்சி செய்து பார்க்கலாமே..

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக கோடை வந்தாலே நம் நினைவிற்கு வருவது மாங்காய், பலா, தர்பூசணி போன்ற பழங்கள் தான். அதுவும் கோடையில் மாங்காய் நமக்கு எளிதில் மட்டும் அல்லாமல் மலிவான விலையிலும் கிடைக்கும். பெரும்பாலும், நாம் மாங்காயை அப்படியே உப்பு மிளகாய் தூள் போட்டு சாப்பிடுவோம் அல்லது மாங்காய் சாம்பார் செய்து சாப்பிடுவோம். ஆனால், இந்த தமிழ் புத்தாண்டுக்கு மாங்காய் பச்சடியை முயற்சி செய்து பார்க்கலாமே. வாருங்கள், இதற்கு தேவையான பொருட்கள், மற்றும் இதன் செய்முறை குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெட்டிய பச்சை மாங்காய் - ஒன்றரை கப்

பொடி செய்த வெல்லம் - கால் கப்

உப்பு - ⅛ தேக்கரண்டி

தேங்காய் துருவல் - கால் கப்

மஞ்சள் தூள் - ⅛ தேக்கரண்டி

கீறிய பச்சை மிளகாய் - 1

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - ½ தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கீறிய பச்சை மிளகாய் - 1 (விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்)

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

  • முதலில் வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லம் நன்றாக கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • அடுத்து, மாங்காயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதையும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
  • கொதி வந்தவுடன், தண்ணீரை முழுமையாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து மாங்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கிண்டி விட வேண்டும்.
  • மாங்காய் நன்றாக சாஃப்ட் ஆக ஆகும் வரை கிண்டி விடுங்கள். அதாவது மாங்காய் கண்ணாடி போன்று தெரியும் வரை சமைக்கவும். விடாமல் கிண்டி விட வேண்டும், இல்லையென்றால் அடிப்பிடித்து விடலாம்.
  • அடுத்து, வெல்லத்தை ஃபில்டர் செய்து இதில் சேர்க்க வேண்டும். துருவிய தேங்காயை நன்றாக ஸ்மூத் பேஸ்ட் ஆக அரைத்துக் கொண்டு இதில் சேர்க்கவும்.
  • 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக விடவும். அவ்வளவு தான், எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கீறிய பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் கொட்டி இறக்கி விடலாம். கடைசியாக, நெய்யில் வேப்பம் பூவை வதக்கி போடலாம்.

 Also Read | புதினா சட்னி பிரியரா நீங்கள்..? குடல் நலனுக்கு மிகவும் நல்லது.. ரெசிபி இதோ..!

top videos

    மாங்காய் பச்சடி தமிழ்புத்தாண்டுக்கு ஏற்ற ஒரு சூப்பர் டிஷ். இதில் உள்ள அறுசுவைகள் (இனிப்பு - வெல்லம், உப்பு - உவர்ப்பு, காரம்/ கார்ப்பு - பச்சை மிளகாய், புளிப்பு - மாங்காய், கசப்பு - வேப்பம் பூ மற்றும் துவர்ப்பு - மஞ்சள் தூள்) சமமாக கலந்து இருப்பது போல நம் வாழ்க்கையில் அனைத்து விதமான உணர்ச்சிகளும் சமமாக கலந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதனால், மறக்காமல் புத்தாண்டிற்கு மாங்காய் பச்சடியை செய்து அசத்துங்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    First published:

    Tags: Mango, Tamil New Year