கருவாடு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு வாயில் எச்சில் ஊற தொடங்கிவிடும். அதுவும் தமிழர்களின் உணவுக் கலாச்சாரத்தில் கருவாட்டுக்கு மிக முக்கிய இடம் உண்டு. கருவாட்டின் வாடையும், அதன் சுவையும் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால், உணவுப் பிரியர்களை பொருத்தவரையில் கருவாடு கம, கமவென்று மணக்கும் என்றே சொல்வார்கள். அது மட்டுமல்ல கருவாடு இருந்தால், ஒரு கைப்பிடி சோறாவது கூடுதலாக சாப்பிடுவார்கள்.
ஊறுகாய், காய்கறி வத்தல் என்று உணவுப் பொருட்களை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு அவற்றைப் பயன்படுத்தி கொள்ளும் தமிழர்களின் உத்திகளில் கருவாடு தயாரித்தல் முறையும் ஒன்று. மீன்களை வெயிலில் முழுமையாக காய வைத்து, அதிலுள்ள நீர்ச்சத்து வற்றிய பின்னர் எஞ்சிய இறைச்சி பகுதியைத்தான் கருவாடாக பயன்படுத்துகின்றனர். வெயில் காய்ச்சலாக தயாரிக்கப்படுவதால் ஆங்கிலத்தில் இதற்கு Dried Fish என்று பெயர்.
வெயிலில் உலர்த்தப்படும் மீன்களில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. ஆனால், அதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளம். கருவாடுகளில் எத்தகைய சத்து உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், இங்கே அதை தெரிந்து கொள்ளுங்கள்.
புரதம் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்
கருவாட்டில் உயர் தரம் கொண்ட புரதச்சத்து இருக்கிறது. குறிப்பாக கருவாட்டில் 80 முதல் 85 சதவீதம் வரையில் புரதம் மட்டுமே இருக்கிறது. கருவாட்டில் உள்ள அமினோ அமிலங்கள் என்பது முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களுக்கு இணையானது. அதேபோல நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக் கூடிய ஆண்டிஆக்ஸிடன்ட் கருவாடுகளில் மிகுதியாக உள்ளது.
சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ்
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய சோடியம் சத்து கருவாட்டில் உள்ளது. இது மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளின் இலகுவான செயல்பாடுகளுக்கு கருவாடு உதவியாக உள்ளது. நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களில் ஒன்றான பொட்டாசியம் சத்தும் கருவாட்டில் உள்ளது.
உடலில் நீர்ச்சத்து சீராக இருக்க பொட்டாசியம் உதவும். நமது நரம்பு மண்டலம், இதயம் மற்றும் தசை ஆகியவை சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து அவசியமாகும். நம் உடலில் எலும்புகளின் கட்டுமானம், பல் பலம் மற்றும் டிஎன்ஏ, ஆர்என்ஏ உருவாகத் தேவையான பாஸ்பரஸ் சத்து கருவாட்டில் உள்ளது.
விட்டமின் பி12, செலினியம், நியசின்
நமது நரம்பு மண்டலம் சுமூகமாக இயங்குவதற்கு விட்டமின் பி12 தேவைப்படுகிறது. சிவப்பு ரத்த அணு உற்பத்தியில் விட்டமின் பி12 முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல உடலில் புரதம் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உற்பத்தியாகவும் செலினியம் சத்து அவசியமாகும். உடலில் செல்கள் அழிவதையும் செலினியம் தடுக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு ஆற்றல் கிடைக்க உதவுவது நியசின் ஆகும். அவசியமான இந்த சத்துக்கள் அனைத்துமே கருவாட்டில் உள்ளன.
சூடான சோறு மற்றும் கருவாடு தொக்கு
200 கிராம் அளவு கருவாட்டை சூடான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சோம்பு, கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை பொறிக்கவும். பின்னர், 5 அல்லது 6 பூண்டு பல் எடுத்து தட்டிப் போடவும். நறுக்கிய சின்ன வெங்காயம் கால் கப் அளவு, தக்காளி 1 நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் கருவாட்டையும் போட்டு வேக விடவும். அரை டீ ஸ்பூன் அளவு மிளகாய் தூள் மற்றும் அரை டீ ஸ்பூன் அளவு தனியா தூள் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொஞ்சம் வற்றிய பிறகு இறக்கி, அதில் கொத்தமல்லி சேர்த்துக் கொண்டால் கருவாடு தொக்கு தயார் ஆகி விட்டது. சூடான சோற்றில், இந்த தொக்கு சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karuvattu Kuzhambu