1990 களில் பேருந்து வசதி, குடிநீர், மருத்துவமனை என்று எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுகாதார பிரச்சனைகளால் வாடிக்கொண்டிருந்த ஒரு கிராமம் இன்று இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான தன்னிறைவு கிராமமாக மாறியுள்ளது. 30 ஆண்டுகளில் இது எப்படி சாத்தியமானது? அந்த சுவாரசிய கதையை பார்ப்போம்.
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமம் உள்ளது அதன் பெயர் சிட்லிங். சித்தேரி மற்றும் கல்வராயன் மலைகளுக்கு நடுவே இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கிராமம், நாடோடி மலைவாழ் மக்களின் இருப்பிடமாக இருந்துவருகிறது. குறிப்பாக லம்பாடி இன மக்கள் தான் இங்கு அதிகம்.
1993 காலகட்டத்தில் அவசரத்துக்கு கூட மருத்துவம் பார்க்க வசதி இல்லாத இந்த கிராமத்தில் 1000 க்கு 147 குழந்தைகள் பிறந்தும் இறந்துள்ளது. இதை கட்டுப்படுத்த என்ன வழி என்று தெரியாமல் தவித்து கிடந்துள்ளனர். அப்போது திண்டுக்கல்லின் காந்திகிராம பகுதியில் மருத்துவம் பார்க்க வந்த டாக்டர் ரெஜியும் டாக்டர் லலிதாவும் இந்த சிட்லிங் கிராமத்திற்கு மருத்துவ சேவை செய்ய வந்துள்ளனர்.
சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் கொண்ட தம்பதியினர் அவர்களின் அறிவை மிகவும் தேவைப்படும் இடத்தில் பயன்படுத்த விரும்பினர். அவர்களின் சேவையை வழங்குவதற்கான சரியான இடத்திற்கான அவர்களின் வேட்டை சிட்டிலிங்கியில் முடிந்தது.
அப்போது கிராமத்தில் இருந்து மருத்துவ தேவையை இவர்கள் பெரிதும் பூர்த்தி செய்துள்ளனர். அதனால் ஊர் மக்கள் சேர்ந்து இவர்களுக்கு ஒரு குடிசையை கட்டிக்கொடுத்துள்ளனர். அங்கு இருந்து மருத்துவம் பார்த்து வந்த மருத்துவ தம்பதி தங்களுக்கு பின்னால் இந்த கிராமம் யாரையும் சார்ந்து இருந்துவிட கூடாது என்று நினைத்துள்ளனர். அந்த எண்ணம் தான் இந்த கிராமத்தை இன்று பெருமடங்கு உயர்த்தியுள்ளது.
இங்குள்ள மக்களை ஊக்கப்படுத்தி அதில் உள்ள பெண்களை படிக்க வைத்து அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி இங்கு சொந்தமாக ஒரு மருத்துவமனையை கட்டியுள்ளனர். அதன்பிறகு சிட்லிங்கில் குழந்தை இறப்பு விகிதம் 20/1000 ஆகக் குறைந்துள்ளது. அதோடு கடந்த 5 ஆண்டுகளாக பிரசவத்தில் இறக்கும் தாய்மார்கள் இல்லை.
ரெஜி மற்றும் லலிதா ஆகியோர் தங்கள் சேவையை பழங்குடி சுகாதார முன்முயற்சி (THI) என்று அழைத்தனர். அவர்களின் விடாமுயற்சியும் தொடர்ந்த சேவையும் பூர்வீக மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவும், மக்களின் பொது நலமும் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. சிட்லிங்கில் தோன்றிய பழங்குடியினர் சுகாதார முயற்சியால் 21க்கும் மேற்பட்ட அண்டை கிராமங்கள் பயனடைகின்றன.
இந்த ஜோடி மருத்துவ வசதிகளுடன் நிற்கவில்லை. இங்கே வாழும் லம்பாடி இனக்குழுவின் பாரம்பரிய 'காத்தர்' எம்பராய்டரி போடும் பழக்கம் சமீப காலமாக குறைந்து வந்துள்ளது. ஆனால் அவர்களது பாரம்பரிய வழக்கம் அழிந்து விட கூடாது என்பதற்காக அங்குள்ள பாட்டிமார்களை வைத்து அந்த கலையை இன்றைய குழந்தைகளுக்கு கற்று கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளனர்.
அதோடு இங்கு உள்ள மக்களை அவர்களது தேவையை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள இயற்கை விவசாயம், கைத்தொழில்கள் கற்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். கல்வி நிகழ்ச்சிகள், கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு சமூகப் பணியாளரிடமிருந்து கதைகளைக் கேட்கும் குழந்தைகளுக்கு நூலக வசதி உள்ளது. உண்மையிலேயே பாராட்டுக்குரியது, இல்லையா?
சமூக சேவகர்கள் முன்னெடுப்பால் உருவான இந்த தனித்துவமான சிட்லிங் கிராமத்தை நீங்கள் பார்க்க விரும்பினால் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சிட்லிங் பள்ளத்தாக்கு கிராமத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள்.இந்த முயற்சியில் நீங்களும் பங்கு கொள்ள நினைத்தால் http://www.tribalhealth.org/ ஐப் பார்வையிடவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.