ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான மீனம் ( மார்ச் இரண்டாம் பகுதியில் வரும்) 10 மற்றும் 11 தேதிகளில் சூரிய அஸ்தமனம் ஆனபின்னர் கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கொட்டன்குளங்கரை பகுதியில் விளக்குகள் மிளிரும், இசையால் வெடிக்கும் திருவிழா கோலத்தில் ஒரு கனவு உலகமே பூமியில் உதிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த இரண்டு தேதிகளிலும் மற்ற ஊர் திருவிழாக்களைப் போலவே, கொல்லத்தில் உள்ள ஸ்ரீ கொட்டன்குளங்கரா தேவி கோயிலின் சமயவிளக்கிலும் அழகான பெண்கள் தங்கள் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலம் நடத்துகிறார்கள். ஆனால் இங்கே நீங்கள் கூர்ந்து கவனித்தால், உங்களுக்கான ஆச்சர்யம் அடங்கி இருக்கும். விளக்குகளை ஏற்றுவது பெண்கள் அல்ல, பெண்களை போல அலங்கரித்துக்கொண்ட ஆண்கள் என்பதை நீங்கள் காணலாம்!
சாதி, மதம், வயது, பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கேரள மாநிலம் முழுவதிலுமிருந்து ஆண்கள், புடவை அணிந்து, மல்லிகை பூ சூடி, அழகான ஒப்பனைகள் செய்துகொண்டு இந்த தனித்துவமான சடங்கில் பங்கேற்கிறார்கள். பெண் வேடமிட்ட ஆண்கள் ஐந்து முகம் கொண்ட கேரளத்தின் தெய்வீக சமயவிளக்குகளை ஏற்றி கோவிலை சுற்றி வருகிறார்கள்.
இந்த செய்கை மூல தெய்வத்தின் மீதான அவர்களின் பக்தியின் அடையாளமாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் கோவில் சிறப்பு வேண்டுதலாகவும் கருதப்படுகிறது.இப்படி செய்வதால் தங்களது வேலை, பணம், சொத்து, போன்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்புகின்றனர். அதேநேரம் ஆண்களுக்கு அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களே ஒப்பனை செய்து அனுப்புகின்றனர்.
19 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவின் இறுதி இரண்டு நாட்களில் மாலையில் தொடங்கி விடியும் வரை இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறும். புகழ்பெற்ற சமயவிளக்கு சடங்கின்போது ராட்சத யானை திடம்பு எனும் தெய்வ சிலையை சுமந்து ஊர்வலம் செல்லும் காட்சியை இரவு முழுவதும் காணலாம்.
வரலாறு:
உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, ஒருமுறை மாடு மேய்க்கும் சிறுவர்கள் காடுகளில் கிடைத்த கல்லில் தேங்காய் உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்கும்போது கல்லில் இருந்து ரத்தத் துளிகள் வழிவதைக் கண்டனர். பயந்துபோன சிறுவர்களை ஊர்காரர்களிடம் சொல்ல அவர்கள் ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது கல்லில் வனதுர்காவின் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும், இந்த இடத்தில் உடனே கோயில் கட்டி பூஜைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.
எனவே, தென்னை மரத்தின் தூண்கள், இலைகள் மற்றும் கீற்றுகளைப் பயன்படுத்தி கல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டினார்கள். அதன் பின்னர் இந்த கோவில் செங்கல் மற்றும் ஓட்டுக் கூரை கொண்ட கோவிலாக மாற்றப்பட்டது. இருப்பினும் முதல் கோவில் நினைவாக ஒவ்வொரு ஆண்டுத் திருவிழாவின் போதும் 'குருத்தோலா பந்தல்' அமைக்கப்படுகிறது.
மென்மையான தென்னை இலை, குருத்தோலை , வாழைப்பழம் மற்றும் பானை ஆகியவற்றால் இன்றைய கோவில் சிறிய அளவிலான மாதிரி ஒன்று செய்யப்படும். இந்த குருத்தோலா பந்தல் கோவிலில்தான் திருவிழா நாட்களில் தெய்வத்தின் சிலை வைக்கப்படும். திருவிழா முடிந்ததும் மீண்டும் கோவில் கட்டிடத்திற்கு தெய்வ சிலை மாற்றப்படும்.
கோவில் கட்டப்பட்ட நாட்களில் இளம் பெண்கள் மட்டுமே வழிபாட்டுத் தலங்களில் மலர் மாலைகளைத் தயாரிக்கவும், விளக்குகளை ஏற்றவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாடு மேய்ப்பவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் போல உடை அணிந்து கோயிலில் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். அப்போது இருந்துதான் இந்த ஆண்கள் பெண்களாக மாறும் பழக்கம் தொடங்கியது.
இதையும் பாருங்க : இலவச விடுமுறையோடு பின்லாந்தில் மகிழ்ச்சியின் கலையை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு!
அதேபோல, தமிழகத்தில் குலசேகரபட்டின திருவிழா எப்படி திருநங்கைகளின் சிறந்த திருவிழாவை கொண்டு இருக்கிறதோ அதே போல இந்த சமயவிளக்கு திருவிழா கேரளாவில் உள்ள திருநங்கைகளின் மிகப்பெரிய திருவிழாவாக மாறியுள்ளது. ஏனெனில் இது அவர்களின் அடையாளத்தை கொண்டாட ஒரு இடத்தை வழங்குகிறது.
இந்த கோவிலுக்கு செல்லும் வழி ...
தமிழகத்தில் இருந்து செல்லும் போது, ரயில் மூலம் சென்றால் கொட்டாங்குளத்திற்கு 13 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லம் ரயில் நிலையம் வரை செண்டு அங்கிருந்து பேருந்து அல்லது தனியார் வாகனத்தை எடுத்துக்கொள்ளலாம்
விமானம் மார்க்கமாக செல்லாத திட்டமிட்டால் 71 கி.மீ. தொலைவிலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அடைந்து அங்கிருந்து தனி வாகனம் மூலம் கொட்டாங்குளத்தை அடையலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.