முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / “செல்லமா வளர்த்த மகள்..” பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை... பெண்ணின் தந்தை பகீர் வாக்குமூலம்..!

“செல்லமா வளர்த்த மகள்..” பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை... பெண்ணின் தந்தை பகீர் வாக்குமூலம்..!

கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை

கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை

கிருஷ்ணகிரியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் பெண்ணின் உறவினர்களால் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரும் கிருஷ்ணகிரி டேம் கூட்ரோடு அருகே புழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சரண்யா தனது காதலன் ஜெகனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் ஜெகன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தனது மகளை சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் வரும்படி அழைத்துள்ளனர். இதற்காக பலமுறை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் செய்து கொண்ட சரண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்கி அடைந்த சரண்யாவின் பெற்றோர் தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்ட ஜெகன் மீது மிகவும் விரக்தியில் இருந்துள்ளனர். இதனிடையே ஜெகனுக்கு போன் செய்த சரண்யாவின் சகோதரர் நீங்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருப்பதாகவும் அதனை வந்து பெற்றுச் செல்லுமாறும் அழைத்துள்ளார்.

அதை நம்பி ஜெகன் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் டேம் கூட்ரோடு பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்து சரண்யாவின் தந்தை சங்கர், சகோதரர் அருள் மற்றும் உறவினர் திம்மராயன் ஆகியோர் கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயிரிழந்த ஜெகனின் தந்தை சின்ன பையன் காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் சரண்யாவின் தந்தை உட்பட ஏழு பேர் மீது புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் அவரது சகோதரர் அருள் உறவினர் திம்மராயன் ஆகிய மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனிடைய சங்கர் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் சரணடைந்த சரண்யாவின் தந்தை சங்கர், தனது மகளை மிகவும் ஆசையாக, செல்லமாக வளர்த்ததாகவும் அவருக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் ஆனால் அவரை ஆசை வார்த்தைகள் கூறி ஜெகன் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதால் மனவிரத்தியில் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பெயரில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அருள், திம்மராயன், ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் சிலர் சேர்க்கப்படலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கிருஷ்ணகிரி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

top videos

    செய்தியாளர்; குமரேசன்

    First published:

    Tags: Honor killing, Krishnagiri, Love marriage