எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சோமு. இவர் எம்ஜிஆரின் குருவாகவும் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இவர் கப்பலோட்டிய தமிழன், அபூர்வ சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார்.
மேலும் அவரது மனைவியும், நடிகையுமான எஸ்.சுப்புலட்சுமி தம்பதியினரின் மகன் சண்முகராஜன் என்ற ராஜ முஸ்தபாவும் கடந்த காலங்களில் சாவி, ஊமை விழிகள் மற்றும் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, குடும்பம் மிகவும் நலிவுற்ற நிலையில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது வாய் புற்றுநோய் காரணமாக சண்முகராஜன் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவ செலவிற்கு கூட வழியில்லாமல் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இவர் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவருக்கு நகினா ராஜ் என்ற மனைவியும், மஸ்தான் என்ற மகனும் உள்ளனர்.
இதனிடையே மகன் மஸ்தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி 2 கால்களும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இதுபோன்று கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வு இழந்து தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நடிகர் சங்கமும் கருணையோடு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று நகினா ராஜ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நகினா ராஜ் கூறுகையில், “நடிகர் சங்கத்தில் கமிட்டி மெம்பராக இருந்தவர் எங்கள் மாமியார் S.சுப்புலட்சுமி. தற்போது எங்களது குடும்ப வறுமை குறித்து நடிகர் சங்கத்தில் பலமுறை முறையிட்டும், எந்த பலனும் இல்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு பார்க்கலாம் என்று கூறுகின்றனர். தற்போது எங்கள் குடும்பம் உணவிற்கு கூட வழியில்லாமல், வாடகை கொடுக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்துகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் உதவித்தொகையும் தற்போது வருவதில்லை.
மேலும் இதுவரை எந்த உதவியும் நடிகர் சங்கத்திலிருந்தும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, மூத்த நடிகர்கள் எங்களின் நிலைமையை உணர்ந்து உதவி செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகவும், பல்வேறு படங்களில் நடித்து சென்னை கோடம்பாக்கத்தில் ஸ்டண்ட் சோமு என்ற பெயர் ஒரு வீதிக்கு வைத்து போற்றப்பட்ட ஸ்டண்ட் சோமுவின் மகன் ஆதரவின்றி தவித்து வருவது பெரும் வேதனைக்குரியதாக உள்ளது” என்று தெரிவித்தார்.
செய்தியாளர் : செல்வா - ஒசூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Krishnagiri, Local News, Tamil Cinema