கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில், கோட்டாச்சியர் கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோட்டாச்சியரின் வாகனம் மோதி படுகாயம் அடைந்த 17 வயது சிறுமிக்கு நீதி கேட்டும் பொதுமக்கள் சாலை மறியல், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலின இளைஞரை கோவிலின் உள்ளே விடாமல் தடுத்ததாக கூறப்பட்ட நிலையில் குளித்தலை ஆர்டிஓ புஷ்பாதேவி தலைமையில் வருவாய்துறையினர் கோவிலின் கதவை பூட்டி சீல் வைத்தார்.
இதற்கு அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட சமூக மக்கள் எட்டு ஊருக்கு பொதுவான இந்த கோவிலை எங்களது பொருட்செலவில் கட்டி பராமரித்து வழிபாடு செய்து வருவதாகவும், ஆனால் குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சாதி ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதாகவும், மேலும் இதற்கு முன்பு பலமுறை சுயநலத்திற்காகவும் பணம் பரிக்கும் நோக்கில் தங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் நேற்று விசாரணை மேற்கொண்ட ஆர்டிஓ புஷ்பாதேவி தங்கள் தரப்பு பதிலை கேட்காமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு கோவிலுக்கு சீல் வைத்துள்ளதாகவும், மேலும் ஆர்டிஓ வாகனம் மோதி 17 வயது சிறுமி பவதாரணி என்பவர் காலில் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஆனால் சிறுமி மீது மோதிவிட்டு ஆர்டிஓ வாகனம் நிற்காமல் சென்று விட்டதாகவும், சிறுமின் உயிரை ஒரு பொருட்டாக நினைக்காமல் சென்ற ஆர்டிஓவை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் வீரணம்பட்டி, சரக்கம்பட்டி, கொள்ளுதண்ணி பட்டி, மேலஆனைக்கவுண்டம்பட்டி, கீழஆனைக்கவுண்டம்பட்டி, வீரகவுண்டம்பட்டி, மாலப்பட்டி, கரிச்சம்பட்டி ஆகிய 8 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி - பாளையம் சாலையில் 3 இடங்களில் குறுக்கே அமர்ந்தும், மரக்கட்டைகள், கற்களை போட்டும், கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு கோவிலை திறக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட போவதாகவும், ஆர்டிஓ வாகனம் மோதி சிறுமி படுகாயம் அடைந்ததற்கு அவருக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் மக்கள் தற்போது ஒரே இடத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் ஏடிஎஸ்பி மோகன் தலைமையில் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் என 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க... டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.