ஹோம் /கன்னியாகுமரி /

தமிழர் மரபில் நாக வழிபாட்டை பறை சாற்றும் கன்னியாகுமரி நாகராஜா கோவில்- வரலாறு தெரியுமா?

தமிழர் மரபில் நாக வழிபாட்டை பறை சாற்றும் கன்னியாகுமரி நாகராஜா கோவில்- வரலாறு தெரியுமா?

கன்னியாகுமரி நாகராஜா கோவில்

கன்னியாகுமரி நாகராஜா கோவில்

Nagerkoil Nagaraja Kovil | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா திருக்கோவில் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Nagercoil, India

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா திருக்கோவில் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

  நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திருக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாக உள்ளது. இக்கோயிலின் மூலவராக நாகராஜர் இருக்கிறார். இக்கோயிலின் தீர்த்தம் நாக தீர்த்தம் எனப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் தெய்வமான நாகராஜர் சுயம்பு வடிவானவர் என்பது முக்கிய அம்சமாகும்.

  கோவிலின் வரலாற்றின்படி முற்காலத்தில் இப்பகுதியில் வயலில் ஒரு பெண் கதிரறுத்து கொண்டிருந்த போது, ஒரு நெற்கதிரிலிருந்து திடீரென்று ரத்தம் வந்ததாகவும் இதை கண்ட அந்த பெண் ஊர் மக்களிடம் சென்று இதை பற்றி கூறிய போது, அவர்கள் வந்து அந்த நெற்கதிரை ஆராய்ந்த போது அக்கதிருக்கு அடியில் ஒரு நாகராஜர் விக்கிரகம் இருந்ததை கண்டு, அதை சுற்றி ஒரு சிறிய அளவிலான கோயில் ஒன்றை அமைத்தனர்.

  நாகராஜா கோவில்

  பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்ட வர்மா இக்கோயிலுக்கு வந்த போது தனது தோல் வியாதி குணமடைய பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன் நாகராஜர் சுவாமிக்கு மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்டினான்.

  நாகராஜா கோவில்

  அதுமட்டுமல்லாமல் அருள்மிகு நாகராஜா சுவாமி கோயில் சிறப்புகள் என்பது தமிழ்நாட்டில் பாம்பு வழிபாட்டிற்கு என இருக்கும் மிகப்பெரிய கோவிலாகும். பாம்பானது எத்தகைய புழுதியில் சென்றாலும் அதன் உடலில் புழுதி ஓட்டுவதில்லை. அதே போன்று மனிதனும் செல்வம், சொந்தம் என்று வாழ்ந்தாலும் எதன் மீதும் பற்றுதலின்றி வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும் என்பதை நாக வழிபாடு உணர்த்துவதாக கூறப்படுகிறது.

  பொதுவாக சிவன் கோயில்களில் சண்டி, முண்டி என்பவர்களும், பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த நாகராஜர் கோயிலில் தர்னேந்திரன் என்கிற ஆண் நாகமும், பத்மாவதி என்கிற பெண் நாகமும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். கோயில் மூலஸ்தானத்தில் பாரம்பரிய ஓலை கூரைக்கடியில் மூலவரான நாகராஜர் இருக்கிறார். இக்கோயிலை இன்றும் தெய்வீக நாகங்கள் பாதுகாப்பதாகவும், அதனாலேயே நாகங்களின் மூலஸ்தானத்தில் ஓலைக்கூரைகள் வேயப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் பழைய ஓலை கூரையை பிரித்து புது கூரையை வேய்கின்றனர்.

  பொதுவாக பெருமாள் சந்நிதியில் இருக்கும் கொடிமரங்களில் கருடனை அமைப்பார்கள். ஆனால் இக்கோயிலில் இருக்கும் அனந்தகிருஷ்ணர் சந்நிதியின் கொடிமரத்தின் உச்சியில் ஆமையை அமைத்திருக்கின்றனர். கருடனும், பாம்பும் விரோதிகள் என்பதால் இங்கிருக்கும் கொடிமரத்தில் ஆமையை வடித்துள்ளனர். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது பெருமாள் கூர்மம் எனப்படும் ஆமை வடிவம் எடுத்ததால் இந்த ஆமை சிலையை வைத்ததாக கூறப்படுகிறது. கோவிலில் பூதத்தான், சாஸ்தா, பாலமுருகன் ஆகிய தெய்வங்களுக்கும் சந்நிதி இருக்கிறது.

  இக்கோயில் கிழக்கு நோக்கிய வாயில் கொண்டதாக இருந்தாலும், தெற்கு வாசலே பிரதான நுழைவாயிலாக இருக்கிறது. இந்த வாயில் மிக பிரம்மாண்டமாக இருப்பதால் இதற்கு மகாமேரு மாளிகை என்கிற பெயர் உண்டாயிற்று. அதிகாலை 4 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

  கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைமையிடமாக இருக்கும் நாகர்கோவிலுக்கு நாகராஜா கோவில் இருப்பதால் நாகர்கோவில் என பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.

  அதுமட்டுமல்லாமல் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவை சார்ந்தவர்கள் வட இந்தியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பல தரப்பட்ட மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் : மாரிஸ் கோகுல், கன்னியாகுமரி

  Published by:Karthick S
  First published:

  Tags: Kanniyakumari, Local News