காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் தரிசு நிலத்தில் பலன் தரும் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு அமைத்து முன்மாதிரி கிராமமாக தேவரியம்பாக்கம் ஊராட்சி திகழ்ந்து வருகிறது
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம்,தேவரியம்பாக்கம் கிராமத்தில்,ஊராட்சி மன்றத்தின் சார்பில் பல்வேறு அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முன்னோடி திட்டமாக குறுங்காடு வளர்ப்பு திட்டமானது பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்போடு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேவரியம்பாக்கம் கிராமத்தில் கல்குவாரிகளால் கைவிடப்பட்ட பயன்பாடற்ற நிலையில் இருக்கும் அரசுக்கு சொந்தமான காலி நிலங்களை தேர்வு செய்து அவற்றை சீர் செய்து பலன் தரும் பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டன. வீணாக கைவிடப்பட்ட குவாரி குட்டையில் தேங்கி இருக்கும் தண்ணீரை சூரிய சக்தி மூலம் உறிஞ்சி ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத வகையில் சொட்டு நீர் பாசனம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இந்த கிராம மக்கள் நீர் மேலாண்மையில் இவ்வளவு சிறந்து விளங்கியதை கண்டு நாம் வியப்படைந்தோம்.
இந்த காட்டில் 12,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு தற்போது அதனை பராமரிக்கும் பணியை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம்முடைய மண்ணின் மனம் மாறாத நாட்டு மரங்களான இலுப்பை, வேம்பு,மருதம்,பாதாம்,அரச மரம், மா ,பலா, அத்தி,நாவல்,புளி,மகிழம், வேங்கை என பல்வேறு வகையான மரக்கன்றுகளும் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இத்தனை முயற்சிகளையும் தலைமையேற்று சிறப்பாக செய்துவரும் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமாரிடம் இந்த காடு வளர்ப்பு எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? அதுவும் நீர் மேலாண்மையில் உங்கள் தனித்துவத்தை பார்த்தோம் என்று வியந்து கூறி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தோம். அனைத்திற்கும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சில வரிகளில் பதிலளித்தார்.
இது குறித்து பேசிய அஜய்குமார், இந்த குறுங்காடு மூலம் சுற்றுச்சூழல் வளம் அடைவதுடன் பல்லுயிர் பெருக்க தன்மை ஏற்பட்டு ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாக இந்த பகுதி அமையும் என்றும் மேகங்களை ஈர்க்கும் சக்தி மரங்களுக்கு உண்டு, மரங்கள் மூலம் மழை கிடைக்கும் அதேபோல் நீர் மேலாண்மை மற்றும் நாட்டு மரங்கள் நடவு மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நிலத்தடி நீர் உயர்ந்தால் விவசாயம் செழிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை” என்று கூறி தனது குறுங்காட்டை பார்வையிட கிளம்பினார் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் M.D.அஜய்குமார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News