காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் செங்கோல் பற்றிய ஆச்சர்ய தகவல்களை விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டுடன் தொடர்புடைய செங்கோல்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்தில் பயன்படுத்தியது போன்ற தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினத்திடம் இருந்து 1947ல் பெறப்பட்ட செங்கோலை பிரதமர் மோடி வைக்க உள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அந்த செங்கோல் சிறப்பு பற்றியும், தமிழகத்திற்கும், தமிழ் மன்னர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றியும் இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
செங்கோலின் சிறப்பு
இதுகுறித்து வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் கூறியதாவது, “செங்கோல் என்பது தமிழ் மன்னர்களின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. தமிழக அரசர்களுக்கு அரியணையும், மகுடமும் போன்றே செங்கோலும் இன்றியமையாத சிறப்புகளில் ஒன்றாகும்.
ஒரு நாட்டு மன்னனின் ஆட்சி நேர்மையானதாக, நீதிநெறி வழுவானதாக, குடிமக்களை காப்பதாக, பாரபட்சமின்றி நடுநிலையோடு அமைய “செங்கோல் எனும் நேரிய தண்டு அரசன் வீற்றிருக்கும் போதெல்லாம் கையில் காணப்படும்” என சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் பாண்டிய மன்னன் செய்யாத தவறுக்காக கோவலனுக்கு தவறான தண்டனை வழங்கியதால் “வழுவிய செங்கோலைப் பாண்டிய மன்னன் தன் உயிரைக் கொடுத்து நிமிர்த்தினான்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்காசுப் புலவர் இயற்றிய தண்டலையார் சதகம் எனும் நூலில் செங்கோல் சிறப்பு பற்றி குறிப்பிட்டுள்ளதாவது, “ஔவையார் குடி உயர கோல் உயரும்" என செங்கோல் சிறப்பை எடுத்துரைக்கிறார்.
கொற்கைப் பாண்டியர்கள் முடிசூடும்போது பெருங்குளம் மடாதிபதியிடமிருந்து செங்கோல் பெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
மதுரை பாண்டியர்களின் வழக்கம்
மதுரை பாண்டியர்கள் மீனாட்சி அம்மனிடம் செங்கோல் பெறும் வழக்கம் இருந்தது. திருமலை நாயக்கர்கள் மற்றும் நாயக்க மன்னர்களும் இதையே பின்பற்றினர். கிபி 9ம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழப்பேராசு பற்றி குறிப்பிடும் வரலாற்றாசிரியர்கள், சோழர்கள் சுமார் 430 ஆண்டுகள் தொடர்ந்து செங்கோல் ஆட்சி நடத்தினர் என குறிப்பிட்டுள்ளனர். ராஜேந்திர சோழன் ஈழநாட்டின் மீது படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களில் இருந்து தோற்ற பாண்டிய மன்னன் ஆட்சியே பறிபோனாலும் செங்கோலை காத்த செய்தியும், அந்த செங்கோல் கடல் கடந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் போர்தொடுத்துச் சென்று செங்கோலை மீட்டு வந்த இந்த செய்தியால் செங்கோலுக்கு எத்தனை முக்கியத்துவம் நம் மன்னர்களால் வழங்கப்பட்டிருந்தது என்பதை அறியலாம்.
தமிழரின் மரபிலும் வரலாற்றிலும் இடம் பிடித்த இவ்வளவு சிறப்பு வாய்ந்த செங்கோல் இந்திய தலைநகரம் டில்லிக்கு சென்றதை இப்போது பார்ப்போம். 1947 ஆகஸ்டு 15ல் சுதந்திரத்தின்போது மவுண்ட் பேட்டன் நேருவிடம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம். அதை எப்படி கொடுப்பது என்று வினவியுள்ளார்.
தொன்று தொட்டு வந்த மரபு
அதற்கு நேரு, மூதறிஞர் ராஜாஜியை அணுக அதற்கு அவர் தமிழ் மன்னர்கள், ஆட்சி மாற்றம் நிகழும்போது, செங்கோலைப் புதிய மன்னருக்கு கொடுக்கும் மரபு உள்ளதை தெரிவித்துள்ளார். அதற்கு நேருவும், “அவ்வாறே ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்ல, ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்தார்.
சில நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்ட செங்கோல் இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளையும், அவருடன் ஓதுவார் மூர்த்திகளையும் அனுப்பிட ஏற்பாடு செய்தார் ஆதினம். இவர்கள் ராஜாஜியுடன் விமானத்தில் செங்கோலுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். சுதந்திரம் பெறும் நிகழ்வில் இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், “வேயிறு தோளிபங்கன்” என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தை பாடினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
திருக்குறளில் விளக்கம்
11வது பாடலின் கடைசி வரி "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்ற வரியை பாடி முடிக்கும்போது செங்கோல் நேருவிடம் அளிக்கப்பட்டது. உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் திருக்குறளில் செங்கோண்மை என்ற அதிகாரத்தை படைத்து அதில் குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆராய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு ஆராய்ந்தும்
குடிமக்களை அணைத்து கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தவும், நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படும் எனவும், ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல, குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தலைநகரில் செங்கோல் இடம் பெறுவது தமிழர்களாகிய நமது தொன்மை வாய்ந்த பாரம்பரியத்திற்கு கிடைத்த பெருமையாகும்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News