முகப்பு /காஞ்சிபுரம் /

வம்சாவளியாக தொடரும் சிற்பக்கலை.. காஞ்சிபுரம் நவசக்தி அம்மன் சிற்பக் கலைக்கூடத்துக்கு ஒரு விசிட்!

வம்சாவளியாக தொடரும் சிற்பக்கலை.. காஞ்சிபுரம் நவசக்தி அம்மன் சிற்பக் கலைக்கூடத்துக்கு ஒரு விசிட்!

X
நவசக்தி

நவசக்தி அம்மன் சிற்பக் கலைக்கூடம் 

Kanchipuram Statue making | காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த சிற்பக்கலைக் கூடத்தை வெங்கடேசன் ஸ்தபதி வழிநடத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

கண்ணையும் கருத்தையும் தன்பால் ஈர்க்கும் சிறப்பை பெற்றது அழகான சிற்பங்கள். கட்டடக் கலையை விட மிகவும் நுட்பமானது சிற்பங்களை செதுக்கும் சிற்பக்கலை. தமிழ்நாட்டில் பல்லவ சிற்ப மரபு, சோழர் சிற்ப மரபு, பாண்டியர் சிற்ப மரபு, விசய நகர சிற்ப மரபு என்று பேசுவதுண்டு. அவ்வாறு பண்டைய தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றி இருந்த சிற்பக்கலையை தற்போது போற்றி பாதுகாத்து வருகின்றனர் சில சிற்ப கலைக்கூடங்கள் அதில் ஒன்று தான் காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் ,ஒலிமுகமதுபேட்டை அருகே CVM நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ நவசக்தி அம்மன் சிற்ப கலைக்கூடம்.இங்கு பல்வேறு வகையான சிலை வடிவமைக்கப்படுகிறது.

அதில் பல பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில அழகுக்காக வைக்கப்படுகிறது. அப்படி ஆன்மீக ஸ்தலங்களுக்கு அனுப்பப்பட்ட சில சிலைகள் குடமுழுக்கு செய்யப்பட்டு இன்றும் கம்பீரமாக காட்சி தரும் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில் நாராயணி அம்மன் சிலையாக வீற்றிருக்கிறது. இதை ஸ்ரீ நவசக்தி அம்மன் சிற்பக் கலைக் கூடத்தில் உள்ள ரகுராம் ஸ்தபதியால் செதுக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த சிற்பக்கலைக் கூடத்தை ரகுராம் ஸ்தபதி வழிநடத்தி வந்த நிலையில் அவரை தொடர்ந்து தற்போது அவருடைய சகோதரர் வெங்கடேசன் ஸ்தபதி, முறையாக 4 ஆண்டுகள் சிற்ப சாஸ்திர படிப்பில், பட்டம் பெற்று தங்கள் மூதாதையர் வழிவந்த சிற்பக் கலைக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் பல்வேறு ஆன்மீக சிலைகளை தத்துரூபமாக வடிவமைத்து தருகிறார். தற்பொழுது வெங்கடேசன் ஸ்தபதி இந்த சிற்பக் கலைக் கூடத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் கொண்டு சிலை வடிவமைத்து வருகிறார்.

இவரின் மூதாதையர்கள் உளி கொண்டு பல்வேறு ஆன்மீக சிலைகளில் ஒவ்வொரு சிலைக்கும் ஏற்றார் போல் வாகனம், ஆயுதங்கள், கோபதாபங்கள், நடனங்கள் என பல்வேறு முக பாவனைகள் கொண்ட பலவகையான ஆன்மீக சாஸ்திரங்களுக்கு ஏற்றார் போல் வேதங்களில் கூறப்படும் தெய்வங்களின் உருவங்களை வடிவமைத்து உயிரோட்டமான சிலை வடித்து வந்தனர்.”தற்பொழுது உள்ள நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றார் போல் பழங்கால உளிகளுக்கு பதிலாக நவீன இயந்திரங்களைக் கொண்டு மிக உயரமான, மிகச் சிறிய வடிவிலான பல்வேறு வகையான ஆன்மீக சிலைகளை மின் கருவிகளின் உதவியுடன் உருவாக்கினாலும் இன்றும் சிலையை இறுதியாக உளியை கொண்டு வடிவமைத்தால் மட்டுமே அந்த சிலை உயிரோட்டம் உள்ள தத்துரூபமான சிலைகளாக வடிவமைக்க முடியும்” எனக் கூறுகிறார் வெங்கடேசன் ஸ்தபதி.

இது மட்டுமல்லாது இவர்கள் கலைக்கூடத்தில் இருந்து செய்யப்பட்ட சிலைகள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏன் இங்கு செய்யப்பட்ட விஸ்வகர்மா சிலை மலேசியாவுக்கு, வெளிநாடு வாழ் தமிழர்கள் வணங்கும் வகையில் அமைத்துத் தந்தது பெருமையான விஷயம் என்று தெரிவித்தார்.

மேலும் இக்கலைக்கூடத்தில் கங்காதீஸ்வரர் சிலை, அதாவது சிவபெருமான் தலையில் கங்காதேவியின் தத்ரூப உருவம் சிலையாக வடிவமைத்து சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நீர் பீச்சு அடிப்பது போன்ற அமைப்பை கலை உணர்வோடு வடிவமைத்து கொடுத்தது மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது என தெரிவித்தார்.

மேலும் காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் ஒன்பதடி நீளமும் ஜந்து அடி அகலம் கொண்ட மிகப்பெரிய சிலையான ஸ்ரீ அங்காளம்மன் சிலையை வடிவமைத்ததை பிரமிப்பாக பொதுமக்கள் கண்டு வணங்கி செல்வதை கண்டோம். நாங்கள் உருவாக்கிய சிலைகளில் பெரிய சிலை என்றால் அந்த சிலையை கூறலாம் என்றார்.

இறுதியாக ஸ்ரீ நவசக்தி அம்மன் கலைக்கூடத்தில் இருந்து உருவாக்கப்படும் சிலைகள் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சிறப்பு வாய்ந்த கோயில்களில் மூலவராக வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறி தெய்வத்தை வணங்கும் போது மன நிறைவோடு வீடு திரும்புவதை கண்டு பெருமைப்படுவதாக தெரிவித்தார்.மேலும் எங்கள் கலை உணர்வை பொதுமக்கள் மற்றும் பல்வேறு ஆன்மீக பிரமுகர்களும் தெரிந்துக்கொண்டு இதுபோன்ற சிலைகளை தங்களுக்கும் வடிவமைத்துத் தருமாறு எங்களை விரும்பி கேட்டுக் கொள்வது நாங்கள் இப்பணிக்கு செய்யும் மரியாதை மற்றும் பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு வரவேற்பு கிடைத்தது எங்களுக்கும் மன நிறைவை தருகிறது என்று சொல்லி ஒரு சிலையை இறுதியாக சில மாறுதல் செய்ய உளியுடன் கிளம்பினார் வெங்கடேசன் ஸ்தபதி. சிற்பக்கலை மீது இவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு கண்டு வாயடைத்து தான் வீடு திரும்பினோம்.

First published:

Tags: Kanchipuram, Local News, Statue