காஞ்சிபுரம் என சொன்னாலே பட்டும், கோயில்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இங்கு பல அதிசயங்களை தன்னுள் கொண்டுள்ள கிணறு ஒன்று இருக்கு. பல்லவர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் நடவாவி கிணறு எனப்படும் அதிசய கிணற்றை பற்றி தான் தற்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம்.. நான் கடவுள் படத்தில் முக்கிய காட்சிகள் இந்த கிணற்றில் படமாக்கப்பட்டிருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு..
காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்கு செல்லும் சாலையில் உள்ளது ஐயங்கார்குளம் எனும் கிராமம்.. இந்த கிராமத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு ஒன்று இருக்கிறது. அந்த படிகளின் வழியாக கீழிறங்கி சுரங்கம் போன்ற பாதை வழியே சென்றால் ஒரு மண்டபம் இருப்பதை காண முடியும். அந்த மண்டபத்துக்குள் ஒரு கிணறு உள்ளது. இதுதான் சிறப்புமிக்க நடவாவிக் கிணறாகும்.
வாவி என்றால் கிணறு என்று பொருள், நட என்றால் நடந்து வருதல் என்று பொருள்படும். கிணற்றுக்குள் ஒரு கிணறாக அமைந்திருக்கிறது இந்த சிறப்புமிக்க கட்டுமான அமைப்பு. இங்கே தரைத்தளத்தில் இருந்து படிக்கட்டுகளால் ஆன சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதன் வழியாக கீழிறங்கி 27ஆவது படி வரை சென்றால், மண்ணுக்கு அடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நீராழி மண்டபத்தை அடையலாம்.
பொதுவாக சில படிகட்டுகள் வரைதான் இறங்கிச் செல்ல முடியும், மற்ற படிகள் அனைத்தும் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும். எனவே, கிணற்றுக்குள் இருக்கும் மண்டபம் முழுவதும் தண்ணீருக்குள்தான் மூழ்கி இருக்கும். இந்த தண்ணீரை ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு மேட்டார் பம்ப் மூலம் இறைத்து வெளியேற்றி, மண்டபம் வெளிப்பட ஏற்பாடு செய்யப்படுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த ஐயங்கார்குளம் கிராமத்திற்கு சித்திரை மாதம் பௌர்ணமி (சித்திரா பௌர்ணமி) அன்று வரதராஜ பெருமாள் எழுந்தருளி நடவாவி உற்சவம் கண்டருள்வது வழக்கம்.
அந்த வகையில் சித்ரா பௌர்ணமி உற்சவத்திற்கு ஐயங்கார் குளம் சஞ்சீவி ராயர் எனும் அனுமன் திருக்கோவிலுக்கு எழுந்தருளும் வரதராஜ பெருமாள், அங்கு சிறப்பு திருமஞ்சனங்கள் செய்து கொண்டு சஞ்சீவி ராயர் கோவிலுக்கு பின்புறம் பூமிக்கு அடியில் 12 தூண்களைக் கொண்ட நீராழி மண்டபத்துடன் கூடிய நடவாவி கிணற்றில் இறங்கி உற்சவம் கண்டருள்வார்.
சிறப்புமிக்க இந்த நடவாவி கிணறு உற்சவத்திற்காக, நீர் நிறைந்துள்ள நடவாவி கிணற்றில் இருந்து நீராழி மண்டபத்தை சுத்தம் செய்வதற்காக நீரை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக டீசல் பம்ப் மூலம் கிணற்றில் உள்ள நீரை வடியச்செய்து, நீராழி மண்டபம் வெனியே தெரியும் வகையில் கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணற்றுக்கு எழுந்தருளும் இந்த சித்ரா பௌர்ணமி நடவாவி உற்சவம் வரும் மே மாதம் 5ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் நடைபெற உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News