முகப்பு /காஞ்சிபுரம் /

திருக்குறிப்புத்தொண்ட நாயனார் முக்தி பெற்ற காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோவில் சிறப்புகள்..

திருக்குறிப்புத்தொண்ட நாயனார் முக்தி பெற்ற காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோவில் சிறப்புகள்..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் முத்தீசுவரர் ஆலயம் 

Kanchipuram Mutheeswarar Temple | 63 நாயன்மார்களுள் ஒருவரான திருக்குறிப்புத்தொண்டநாயனார் முக்தி பெற்ற முத்தீசுவரர் கோவில் குறித்த ஓர் பார்வை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சி மாநகரின் பெருமைக்குத் துணை செய்யும் வகையில் அமைந்துள்ள அருள்மிகு முத்தீசுவரர் திருக்கோயிலின் சிறப்புகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்..

கலைமிளிர் வாழ்வினுக்கோர் கலங்கரை விளக்கமாகும் நிலைபுகழ் கச்சி என்னும் நெடும்பதி என்று ஆன்றோர்கள் காஞ்சி மாநகரைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.அதாவது எல்லாக் கலைகளும் (கல்வி முதலியவற்றுடன்) சிறந்து விளங்கி,கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கு,கடலில் உள்ள கப்பல் வந்து கரைசேர வழிகாட்டி உதவுவது போல,நிலைத்த புகழை உடைய காஞ்சி மாநகரம்,வாழ்க்கையாகிய கடலில் நீந்துகின்ற ஆன்மாக்களுக்கு, நல்வழி காட்டி உதவி செய்யும் பெரியநகரம் ஆகும் என்பது இதன் பொருள்.

சிவனடியார்களுக்கு முதலில் ஆடை வெளுத்துக்கொடுத்து, அதன்பிறகு மற்றவர்க்கு ஆடைகளை வெளுத்துக் கொடுக்கும் தம் குலத்தொழிலை மேற்கொண்ட ஏகாலியர் குலத்தில் தோன்றிய திருக்குறிப்புத்தொண்ட நாயனாரின் தொண்டை சோதிக்கும் பொருட்டு ஒரு மழைக்காலத்தில் சிவபெருமான் உடல் மெலிந்த வறியவர் போல் மிகவும் அழுக்கேறிய ஆடையுடன் தவ முனிவர் வேடமிட்டு திருக்குறிப்புத்தொண்ட நாயனார் முன் வந்து நின்றார்.

மாறுவேடத்தில் வந்த சிவபெருமான் அணிந்து வந்த அழுக்கேறிய ஆடையை கண்டு வெளுத்து தருகிறேன் என்று திருக்குறிப்புத்தொண்ட நாயனார் கூற, அதைக் கேட்ட சிவபெருமான் இந்த ஆடை அழுக்கேறி இருந்தாலும் என்னுடைய உடலுக்கு குளிரைப் போக்குவதற்கு உதவுகிறது.அதனால் இதனை தர இயலாது எனினும் சூரியன் மேற்கே மறைவதன் முன் இதை வெளுத்து தருவதானால் கொண்டு செல்க!!! என்று கூற தொண்டரும் அவ்வாறே செய்கிறேன் என்றார்.

மலர் மழை:

அதனை கேட்ட சிவபெருமான், இந்த ஆடையை வெளுத்து,உலர்த்தி, பொழுது சாய்வதன் முன் விரைவாக தாராமல் போனால் இந்த உடம்பிற்கு துன்பம் செய்தவர் ஆவீர் என்று கூறி,அவரிடம் ஆடையை கொடுத்தனுப்ப அழுக்கடைந்த ஆடையை வெளுப்பதற்கு திருக்குறிப்புத்தொண்டர் நீர்துறைக்கு எடுத்து செல்ல அந்த வேளையில் இறைவன் திருவருளால் பெருமழை விடாமல் பெய்ய தவ முனிவர் சொல்லிய கால எல்லையையும் கடந்து திருக்குறிப்புத்தொண்டர் ஆடையை வெளுத்து தர முடியாமல் போய் தன்னுடைய வாக்கு தவறியதால் வருந்தி உயிரை விட துணிந்து ஆடைதோய்க்கும் கற்பாறையில் தம் தலையை மோதி உயிர்விடத் துணிந்தார்.

அவ்வாறு செய்ய முனையும் போது அப்பாறையின் அருகில் இறைவனுடைய திருக்கை வெளிப்பட்டு தொண்டருடைய தலையைத் தாங்கி பிடித்தது. வானில் பெய்த தண்ணீர் மழை நின்றது.மலர் மழை பொழிந்தது.பின் சிவபெருமான் தம் துணைவியாருடன் இடப வாகனத்தில் வானில் காட்சி கொடுத்தார்.

முக்தி அளித்த சிவபெருமான்:

அதனைக் கண்ட திருக்குறிப்புத்தொண்டர் மனதில் தோன்றிய அன்புக் கண்ணீரைப் பெருக்க கைகளை குவித்து வணங்கி நின்று கொண்டிருந்தார்.பின்னர் சிவபெருமான் அவரின் திருத்தொண்டின் நிலைமையை கண்டு நீ இனி, என்றும் நிலைத்திருப்பதான சிவலோகத்தில் எப்போதும் பிரியாது வாழ்வாயாக என அருளி திருக்குறிப்புத்தொண்ட நாயனாரை முத்தி அடைய செய்தார். ஆதலால் இக்கோவிலுக்கு முத்தீசுவரர் என பெயர் வந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்திருக்கோயில் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மரபினரான ஏகாலியர் சமுதாயத்தினருக்கு உரிமையுடையதாக விளங்குகின்றது. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள மூலவரான அருள்மிகு முத்தீசுவரர்,அருள்மிகு கருடேசுவரர் சந்நிதிகள்,வரலாற்றுப் பழமை உடையதாகும்.

காஞ்சிபுரம் ஏகாலியர் சமுதாயத்துக் குரியதான இத்திருக்கோயிலை,தொன்றுதொட்டு அந்தச் சமுதாயத்தினரே நிர்வாகம் செய்துவருகிறார்கள். இக்கோயில் அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ளது. அறங்காவலர்கள் தங்கள் முயற்சியினால் அடியார்கள், அருளாளர்களின் பொருளுதவி கொண்டு, பல திருப்பணிகள் செய்து, இக்கோயிலை புதுப்பொலிவுடன் பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றார்கள். வழிபட வருகின்ற சிவனடியார்கள் மனநிறைவோடு வந்து செல்லும் வகையில் கோயிலின் அமைப்பு மிக மிக அழகாக உள்ளது.

First published:

Tags: Kancheepuram, Local News