முகப்பு /காஞ்சிபுரம் /

தென்திசை கைலாயம்.. காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கு இவ்வளவு சிறப்புகளா?

தென்திசை கைலாயம்.. காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கு இவ்வளவு சிறப்புகளா?

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 

Kanchipuram Kailasanathar Temple | தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோவில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவிலாகும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

பல்லவ மன்னன் மகேந்திவர்மன், பல திருப்பணிகளைச் செய்த போதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை இருந்தது. மண். மரம், செங்கல். சுண்ணாம்பு, உலோகம் ஏதுமின்றி ஓர் அற்புத ஆலயத்தை அமைத்திட வேண்டும் என்பதே அது!. அந்த மன்னனின் பெருங்கனவினை அவனது மரபில் வந்த அரசன் ராஜசிம்மன் நிறைவேற்றினார். காஞ்சியில் கைலாசநாதர் என்னும் கைலாய நாதரான சிவனுக்கு கோயில் ஒன்றை மிக அழகாக எழுப்பினார் ராஜசிம்மன்.

தென்திசை கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோவில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோவில்களை ஒத்துள்ளது. போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமை பெற்ற அரசன் ராஜசிம்மன். அதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, கோயில் முழுவதையுமே சிங்கங்களே தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது. பிரம்மாண்டமாக அமைந்துள்ள நந்தி தேவர் அனுமதி பெற்றே நாம் கோவிலுக்குள் செல்ல முடியும்.

இந்தக் கோயிலில் நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் வெளிப்படுத்தும் படி அமைந்துள்ளது.வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்றை காணும் போதே வியப்பில் ஆழ்த்துகிறது. சிவபெருமானின் தோற்றங்களை, அவனது பராக்கிரமங்களை நாயன்மார்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

இங்குள்ள சிற்பங்களின் ஒருபுறம் சம்ஹார மூர்த்தங்களாகவும் மறுபுறம் அனுக்ரக மூர்த்தங்களாகவும் அமைந்துள்ளது. இதனை வடிவமைத்த சிற்பியின் கற்பனையையும், ஆன்மிக அறிவாற்றலையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. காப்பதும் அவனே! அழிப்பதும் அவனே! என்ற அற்புதத் தத்துவத்தை அனுதினமும் எடுத்துரைக்கிறது.

இங்குள்ள மூலவர் 16 பட்டை கொண்ட ஷோடசலிங்கமாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பதுவே இந்த கோயிலின் சிறப்பு. மூலவர் லிங்கத்திற்கு பின்புறச் சுவரில் எம்பிரான் ஏலவார் குழலியோடும். பாலன் குமாரனுடன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள அத்தனை கோயில்களிலும் இது போன்ற அமைப்பினை நாம் காண முடிகிறது. நாரத முனிவர் பூஜித்ததாக கூறப்படும் மூலவர் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட ஷோடசலிங்கம், பளபளப்பான கறுப்புக் கல்லினால் ஆன பெரிய திருமேனி கொண்ட வகையில் அமைந்துள்ளது. கருவறையையும் முகமண்டபத்தையும் சுற்றியுள்ள உள் சுற்றிலும், வெளிச் சுவர்களிலும், பிட்சாடனர், கங்காதரர் திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர். துர்க்கை, திருமால் போன்ற சிற்பங்கள் அமைந்துள்ளன. இந்த கோயிலில் சிவதாண்டவ காட்சிகளையும் காணமுடிகிறது.

கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று. புனர்ஜனனி என்று அழைக்கப்படுகிறது. அதன் உள், வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக இருந்து. தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று. மீளும்போது, புனர்ஜன்மம் எடுத்து வந்த உணர்வே மேலோங்கி வருகிறது. இதனைச் சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை, பிறப்பறுத்து முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்திருக்கோயிலில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதும் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவனை வழிபட்டு செல்வார்கள். பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது இக்கோவிலில் மாதந்தோறும் இரண்டு திருவிழாக்கள் நடைபெறுவதை போன்று வெகுவிமர்சையாக இருக்கும். இக்கோவில் காலை 6 மணி முதல் 10 மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள கைலாய நாதரை தரிசித்து செல்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள கைலாசநாதருக்கு புது வஸ்திரம் சார்த்தியும். பால் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

First published:

Tags: Kailasanathar Temple, Kanchipuram, Local News