காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழாவிற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் பக்தர்களுக்கு ஏற்படுத்தி தரப்படும் என நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன் தெரிவித்துள்ளார்.
கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில், மண் ஸ்தலமாக விளங்கும் ஏலவார்குழலி அம்மை உடனுறை ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நாளை (25ம் தேதி) (சனிக்கிழமை) விநாயகர் உற்சவத்துடன் தொடங்க உள்ளது.
இதனைத்தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பிரம்மோற்சவ திருவிழாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 - 5.45 மணிக்குள் கொடியேற்றப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளான 63 நாயன்மார்கள் வீதி உலா வரும் 31ம் தேதி காலையும், அன்று மாலை வெள்ளி தேர் உற்சவமும் நடைபெற உள்ளது. தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவை ஏப்ரல் மாதம் 3ம் தேதி இரவு நடைபெறும்.
இந்த 14 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காலை மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் அருள்மிகு ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீஏகாம்பரநாதர் எழுந்தருளி காஞ்சிபுரம் முக்கிய நகர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாக்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் சிறப்பான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறுகையில், “பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் , கழிப்பறை, திடீர் உடல் நலவு குறைவு ஏற்பட்டால் முதலுதவி அளிக்க சிறப்பு மருத்துவ முகாம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை பாதுகாப்புகள் என அனைத்தும் பொதுமக்கள் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் எவ்வித அச்சமின்றி அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வருகை புரிந்து சுவாமியின் அருள்பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News