முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

காட்சிப் படம்

காட்சிப் படம்

செய்தியாளர்களிடம் பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், 10 பேர் வரை மட்டுமே பணி செய்யவேண்டிய ஆலையில் 27க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தது விதிமீறல் என கூறினார்

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலையின் உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் கிராமத்தில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான 'நரேன் பயர் வொர்க்ஸ்' என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில், நாட்டுவெடி மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகளை பாதுகாத்து வைக்கும் குடோனும் உள்ளது. இந்த ஆலையில் 27 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், நண்பகல் 12 மணியளவில், பட்டாசு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த பகுதிகளுக்கும் தீ பரவி, வெடிவிபத்து ஏற்பட்டதில் 4 கட்டடங்கள் தரைமட்டமாயின. இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்த நிலையில், சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பூபதி, கஜேந்திரன், விஜயா உள்ளிட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

அதேபோன்று, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

விபத்தில் சிக்கிய 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும் சிலர் சிறு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ஆலையின் உரிமையாளர் நரேந்திரன் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விபத்து குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    இதனிடையே, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 பேர் வரை மட்டுமே பணி செய்யவேண்டிய ஆலையில் 27க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தது விதிமீறல் என கூறினார். அரசின் அனுமதி பெற்று செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையிலும், முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காததால், இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Accident