முகப்பு /காஞ்சிபுரம் /

மக்களின் கையிலிருக்கும் அதிகார மையம்- கிராம சபைக் கூட்டம் நடைபெறும் முறை பற்றித் தெரியுமா?

மக்களின் கையிலிருக்கும் அதிகார மையம்- கிராம சபைக் கூட்டம் நடைபெறும் முறை பற்றித் தெரியுமா?

X
கிராம

கிராம சபைக் கூட்டம்

Kanchipuram | கிராம சபைக் கூட்டம் பற்றிய போதிய புரிதல் இல்லாமலே பெரும்பாலானவர்கள் இருந்துவருகிறோம். கிராம சபைக் கூட்டத்தின் அதிகாரம் பற்றித் தெரிந்துகொள்வோம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

கிராம சபை கூட்டம் என்பது சாதாரண மக்களிடம் உள்ள ஒரு அதிகார மையம் ஆகும். இதன் செயல்பாடுகள் மற்றும் இதன் முக்கியத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். கிராம சபை தீர்மானங்களுக்கு அரசு அதிகாரிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. கிராம சபைக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

பொதுவாக கிராம சபை கூட்டம் என்பது கிராமங்களில் வாக்காளர்களாகிய பொதுமக்கள் தாங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த கிராம ஊராட்சி மன்றத் தலைவருடன் ஒன்றிணைந்து கிராமத்தின் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்து கிராமத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து விவாதிக்கும் ஓர் அற்புதமான திட்டமாகும்.

சட்டமன்றங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால் மக்கள் நேரடியாக விவாதிக்க முடியாது. ஆனால் கிராம சபையில் மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் நேரடியாக இணைந்து நிர்வாகத்தை கேள்வி கேட்கவும், கோரிக்கைகளை முன் வைக்கவும் ஒரு அதிகார மையமாக கிராம சபைக் கூட்டங்கள் விளங்குகிறது.

தமிழ்நாட்டில் தற்பொழுது கிராம சபை கூட்டமானது குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் மற்றும் உள்ளாட்சிகள் தினம் ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி மன்ற தலைவர்களால் கூட்டப்படுகிறது.

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், கிராம வரவு-செலவுகளை சரிபார்த்தல், நியாய விலைக் கடையின் சீரான உணவு வழங்கல் நடவடிக்கை, முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் பெற்றுத் தருதல், பள்ளி மாணவர் சேர்க்கை, அவர்களின் வருகை மற்றும் பள்ளிகளின் வளர்ச்சி ஆகியவை குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும் மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் முறையாக இயங்குவது, தடுப்பூசி திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படும்.

கிராம சபை கூட்டுவதற்கு முதலில் ஊராட்சி மன்றத்துடன் கலந்தாலோசித்து கிராம சபைக்கான கூட்டப் பொருளை தயார் செய்து குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பாக, கூட்டம் குறித்த அறிக்கையை ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிட வேண்டும். தண்டோரா, துண்டுப்பிரசுரம் மற்றும் முக்கிய இடங்களில் விளம்பரம் செய்து, ஊராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

மேலும் மதச்சார்புடைய வழிபாட்டுத் தலங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது. ஒரே ஊராட்சியை சேர்ந்த பல கிராமங்கள் இருப்பின் சுழற்சி முறையில் வெவ்வேறு கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறை.

ஒரு கிராம சபைக் கூட்டத்திற்கு ரூ.1000-ம் வரை ஊராட்சி நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளலாம் என்பது மரபு. மேலும் கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் மக்கள் தொகைக்கேற்ப விகிதத்தில் மக்கள் கலந்துகொள்ளவேண்டும், போதிய அளவில் மக்கள் கலந்துகொள்ளாத கிராம சபைக் கூட்டங்களின் தீர்மானங்கள் செல்லாது. குறைந்தபட்ச மக்கள் கலந்துகொள்ளாத கிராம சபைக் கூட்டங்களை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும்.

காஞ்சிபுரம் | பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

மேலும் கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்து தலைவரோ அல்லது அதிகாரிகளோ நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. கிராம சபை தீர்மானத்தின் நகலை பெறுவதற்கு கிராம மக்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kanchipuram, Local News