காஞ்சிபுரம் மாவட்டத்தில், உடலியக்க குறைபாடுடையோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் உதவி உபகரணங்கள் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உடலியக்க குறைபாடுடைய நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் (ஆக்சிலரி/எல்போ கிரட்சஸ்) போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ அல்லது நோயாலோ கை மற்றும் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும், 18 முதல் 60 வயது வரை உள்ள தையல் பயிற்சி முடித்து தையல் சான்று பெற்றுள்ள உடலியக்க குறைபாடுடையோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தையல் பயிற்சி முடித்த தாய்மார்களுக்கு தையல் எந்திரம், மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும் வழங்கப்படவுள்ளன.
இதேபோல, நடக்க முடியாத மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ரொலேட்டர் எனப்படும் நடைபயிற்சி சாதனங்களும், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், பார்வையற்றோருக்கான ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் மற்றும் பிரெய்லி கைக்கடிகாரங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
9-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி பயிலும் பார்வை குறைபாடுடைய மாணவ மாணவியர்களுக்கு சிறிய எழுத்துக்களை பெரிதாக்கி காட்டக்கூடிய உருப்பெருக்கி (Magnifier), இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு மற்றும் TET, TNPSC போன்ற போட்டித்தேர்வுகளுக்கு பயிலும் பார்வை குறைபாடுடையோருக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னனு முறையில் வாசிக்கும் கருவி (Electronic Braili Reader) பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான திறன்பேசி சாதனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலே குறிப்பிட்ட உதவி உபகரணங்கள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும் மருத்துவர் சான்று உட்பட), ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 044-29998040-இல் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News