காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு அருகே உள்ளது புத்தகரம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோயிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு குழுவினர் கூறுகையில், “வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய வடிவில் மெருகூட்டப்பட்ட புத்தரின் கற்சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. இச்சிலையில், நீளமான காதுகள் 2ம் தோள்வரை நீண்டுள்ளன. வட்டக் கண்கள் திறந்த நிலையில் உள்ளது. மூக்கு தடித்த நிலையிலும் சுருள் சுருளான தலைமுடியுடனும், இடப்புற தோள்பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடையுடனும், இச்சிலையின் பின்பக்கத் தலையில் தாமரை மலர் மீது சக்கரமும், பின்புற மேலாடை (சீவர ஆடை) நேர்த்தியாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் தலையில் உள்ள கொண்டை சற்று தள்ளி பின்னோக்கி இருப்பதால் இந்த சிலையின் காலம் கி.பி 14ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சிலையை பக்தர் கோயிலுக்கு வேண்டுதலுக்காக வழங்கும் வழக்கமும் 14ம் நூற்றாண்டுகளில் மக்களிடையே இருந்துள்ளதாக கூறுகின்றனர். இச்செய்தியை தொல்லியல் துறை சார்ந்த உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன் மற்றும் பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர்.
மேலும் 1990களில் ஊராட்சி மன்றத்தலைவராக இருந்த கங்கப்ப நாயக்கர் என்பவரால் அவ்வூரில் உள்ள விநாயகர் கோயிலுக்கும், அரசுப் பள்ளிக்கும் இடையில் உள்ள பகுதியில் இருந்து இச்சிலையை கண்டெடுத்ததாகவும் அச்சிலையை அன்று முதல் புத்தகரம் பஜனை கோயில் எனப்படும் பெருமாள் கோயிலில் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருவதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அக்கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெளத்த மத வழக்கமான மாலை 6 மணிக்குள் இரவு உணவை உண்டு முடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்ததாகவும், 1930 வரை விநாயகர் ஆலயத்திற்கு வெளியில் ஒரு புத்தர் சிலை வழிபாட்டில் இருந்ததாக செவிவழி செய்தி உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
புத்தர் சிலை உள்ள இவ்வூரின் பெயர் புத்தகரம் ஆகும். இவ்வூர் பெயர் பற்றி மக்களிடம் விசாரித்தபோது மன்னர்கள் காலத்தில் இவ்வூரில் பௌத்த வழிபாடு இருந்ததாகவும், அதனால் இவ்வூர் பெயர் புத்தர் அகரம் என இருந்து காலப்போக்கில் அது மருவி புத்தகரம் என திரிந்ததாகவும், மேலும் ஒரு சிலர் இவ்வூரில் புத்த விகாரம் இருந்ததாகவும், எனவே இப்பகுதி புத்தவிகாரம் என வழங்கப்பட்டு பின்னாளில் இப்பெயர் திரிந்து புத்தகரம் என மாறியதாகவும் குறிப்பிடுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இக்கள ஆய்வின்போது புத்தகரம் ஊராட்சி மன்றத் தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் இராஜ்குமார் மற்றும் சரவணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News