காஞ்சிபுரம் மாவட்டம் நீலமங்கலத்தை சேர்ந்த தாரிகாவின் மகன் சஸ்வின் வைபவ். தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை ஒட்டி, பாட்டி வீட்டிற்கு சென்ற வைபவ், நீச்சல் கற்று கொள்ள வேண்டும் என்று பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற வீட்டின் அருகே இருந்த நீச்சல் குளத்திற்கு தாய் தாரிகா அழைத்து சென்றார். தாயின் கண்காணிப்பில் விளையாடிக் கொண்டிருந்த வைபவ், எதிர்பாராதவிதமாக பெரியவர்கள் நீச்சல் பழகும் இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
நீச்சல் குளத்தில் மகன் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக நீச்சல் குளத்தில் மூழ்கிய வைபவை, சுயநினைவற்ற நிலையில் உயிருடன் மீட்டனர். ஆனால், நீச்சல் குள பயிற்சியகத்தில் முதலுதவி அளிப்பதற்கு கூட யாரும் இல்லாததால், 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டதாக தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முறையான விதிகளை பின்பற்றாத நீச்சல் குளத்தில் பரிதாபமாக 6 வயது சிறுவனின் உயிர் பறிபோனது. சிறுவன் உயிரிழந்த நீச்சல் குளத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முறையான பாதுகாப்பு வசதி இன்றி நீச்சல் குளம் இயங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. அதன் அடிப்படையில், நீச்சல் குளத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் நீச்சல் குள உரிமையாளர் நாகராஜன், அவரது மகன் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில், நீச்சல் குள நிர்வாகத்தின் அலட்சியத்தால், தன்னை போன்று யாரும் பிள்ளையை இழந்து தவிக்கக்கூடாது என்பதே தாய் தாரிகாவின் பிரதான கோரிக்கையாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.