பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் பதவியில் இருக்கிறார். அங்கு நடைமுறையில் இருந்த ஓய்வூதிய திட்டத்தில் மெக்ரான் அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன் முக்கிய அம்சமாக ஓய்வு பெறும் வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 64 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்துக் கடந்த ஜனவரி மாதம் முதல் துப்புரவுத் தொழிலாளர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து மார்ச் ஆறாம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி கடந்த 6 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. 15-ம் தேதி வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20-ம் தேதி வரை போராட்டத்தை நீடித்துள்ளதாகத் துப்புரவுத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
துப்புரவுத் தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாரீஸ் நகரம் தூய்மை பணிகள் நடைபெறாமல் குப்பையாகக் காட்சியளிக்கிறது. சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. சாலையெங்கும் குப்பைகள் நிறைந்து கிடக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கடந்த புதன்கிழமை நிலவரப்படி பாரீஸ் நகர வீதிகளில் சுமார் 7ஆயிரம் டன் குப்பைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலகின் ஃபேஷன் நகரம் என்று அழைக்கப்படும் பாரீசின் நிலையைப் பாருங்கள் என நெட்டிசன்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கமெண்டும் பதிவிட்டு வருகிறார்கள். பிரபல யூடியூபர் டாயோ அய்னா பாரீஸ் நகரக் குப்பைகளைத் தனது டுவிட்டரில் பதிவு செய்து Welcome to Paris என கேப்சனையும் பதிவு செய்துள்ளார்.
துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பாரீஸ் முழுவதும் எலி செத்து நாற்றம் அடிக்கிறது என ஊடகவியலாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் திருத்திய ஓய்வூதிய சட்டத்தை அமல்படுத்துவதிலேயே அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குறியாக இருக்கிறார் என்றும் சிலர் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
உணவகங்கள், இறைச்சி மற்றும் மீன் விற்பனையகங்கள் என அதிகம் குப்பை சேரும் கடைகளில் குப்பை அள்ளப்படாமல் மிகவும் துர்நாற்றம் அடிக்கிறது. இந்த பிரச்னைக்கு முடிவு காண அதிபர் இம்மானேவேல் மெக்ரான் முன்வர வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.