சீன சமூக ஊடகமான ஜியோ ஹாங் சூ தளத்தில், ஒரு பெண் மலேசிய உணவகம் ஒன்றில் தனக்கு நேர்ந்த துன்ப நிகழ்வு ஒன்றை பதிவு செய்திருக்கிறார். கார்மென் என அறியப்பட்ட அந்தப் பெண் மலேசியாவின் ஜோகூர் பாரு பகுதியில் இருக்கும் உணவகத்திற்கு தனது மகள்கள் மற்றும் தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு சூப் ஆர்டர் செய்துள்ளார்.
சூப் வந்தவுடன் அதனை ரசித்து சாப்பிட்டிருக்கிறார். அப்போது காய்கறிகள் மற்றும் கோழியைத் தவிர, சூப்பில் மற்றொரு பொருள் கிடப்பதைக் பார்த்திருக்கிறார். கறுப்பு நிறத்திலிருந்த அந்தப் பொருளை கையில் எடுத்தபோது, அதிர்ச்சியடைந்தார். அது பேட்டரி துண்டு.
நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக அந்தப் பெண் உணவக ஊழியர்களை அழைத்து, சூப்பில் பேட்டரி கிடந்தது குறித்து புகார் அளித்துள்ளார். உடனே ஊழியர்கள் அந்தப் பெண்ணிடம் இருந்து சூப்பை வாங்கி அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர். ஆனால் அவசர அவசரமாக கார்மென் அந்த சூப்பை போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனிடையே ஊழியர்கள் சமையல் அறைக்கு சூப்பை எடுத்துச் சென்று சோதனை செய்வதாக கூறியுள்ளனர். சிறிது நேரம் கழித்து தன்னுடைய சூப்பை தரும்படி அந்தப் பெண் ஊழியர்களிடம் கேட்டபோது, சூப் தூக்கி எறியப்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தும் நோக்கில் சூப்பின் விலையில் 50% தள்ளுபடி வழங்குவதாக கூறியுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு உணவகம் முழு கட்டணத்தையும் தள்ளுபடி செய்தது. அதோடு அடுத்த ஏழு நாட்களில் ஏதாவது உடல் நலக் குறைபாடு ஏற்பட்டால் மருத்துவக் கட்டணத்தை செலுத்துவதாகவும் உணவகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் கார்மென் சமாதானமாகவில்லை. உணவகத்தை விட்டு வெளியே வந்தவுடன் தனது மகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்மென், ''பேட்டரியில் பல்வேறு நச்சுப்பொருட்கள் இருக்கும். அந்த பேட்டரி சூடான உணவில் ஒரு மணி நேரம் கிடந்துள்ளது. இதனால் அந்தப் பேட்டரியில் இருக்கும் வேதிப் பொருட்கள் வெப்பத்தில் ஆவியாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அப்படி ஆவியான நச்சுப் பொருட்கள் உணவில் கலக்க கூடும். இது உடல் நலத்திற்கு மிகவும் சீர்கேட்டை விளைவிக்கும்.
இதுபோன்ற கவனக்குறைவால் ஒருவரின் உயிரும் பறிபோய்விடும் அபாயமும் இருக்கிறது. எனவே வெளியில் உண்ணும் போது ஒவ்வொருவரும் தங்கள் உணவைத் சரிபார்க்க வேண்டும்'' என கார்மென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Soup