அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்று குடியரசு கட்சி வெளியிட்ட வீடியோ அரசியல்வாதிகளை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கான காரணத்தை இங்கு பார்க்கலாம்.
வள்ளுவர் கோட்டம் சிக்னல் முதல் வால் ஸ்டீரிட் வரைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வந்துவிட்டது. இத்தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்களை இன்னும் ஆராய்ந்து வருகிறோம். ஆனால் அரசியலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு நமக்கு ஆச்சர்யத்தையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
And so it begins - #generativeai being used to create misinformation and deepfake election campaign videos.
The Republican National Committee just released an ad against Biden using AI created imagery. Before the pandemic I gave a talk about the dangers of deepfakes across… pic.twitter.com/7bw2yCn24Z
— Theo (@tprstly) April 26, 2023
இப்போது நீங்கள் பார்த்த வீடியோ பைடன் அரசை விமர்சிக்க, அமெரிக்காவின் குடியரசு கட்சியால் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி.
முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. சுருக்கமாகவும், மிக நேர்த்தியாகவும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுடன், மனதில் பதியும் காட்சிகளையும் கொண்ட இந்த காணொலி முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவானது தான்.
இது போன்ற ஒரு புகைப்படத்தையோ, வீடியோ அல்லது, ஆடியோவையோ ஒரு சில நிமிடங்களில் இத்தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்க முடியும் என்பது வாக்காளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் மிரட்சியை ஏற்படுத்துகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நாம் அனைவரும், நமக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் குறித்த தகவலை டிஜிட்டல் தடங்களாக விட்டு விட்டு கடந்து செல்கிறோம். இந்த தகவலுடன் ஒரு பகுதியில் வசிக்கும் வாக்காளர்களின் பட்டியலை இணைத்து பகுப்பாய்வு செய்தால், அக்குறிப்பிட்ட பகுதி மக்களின் வாக்குகளை அப்படியே பெற ஒரு சூப்பரான தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
கோடிக்கணக்கான மக்களின் டிஜிட்டல் தரவுகளை பகுப்பாய்வு செய்து, அவர்களின் பழக்க வழக்கங்களை எளிதில் கண்டறிந்து, தங்களுடைய வாக்காளர்கள் யார் என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எளிதாக வழங்கும் என்பது அரசியல்வாதிகளுக்கு பயன்கொடுக்கும் விஷயம் தான்.
அதே போல, கடந்த காலத்தில் பதிவான புள்ளி விவரங்களை கொண்டு, எந்தெந்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனைகளையும் இந்த தொழில்நுட்பம் வழங்க முடியும்.
இதெல்லாம், அரசியல் கட்சிகளுக்கு பலனளிக்கும் விஷயங்கள். வாக்களிக்கும் நாளன்றோ அல்லது சில மணி நேரத்திற்கும் முன்போ இத்தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் போலி புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் வாக்காளர்கள் மனங்களில் என்ன தாக்கதை ஏற்படுத்தும் என்பது அரசியல் வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். கோடிகளை கொட்டி களம் காணும் வேட்பாளர்களையும் இந்த செயற்கை நுண்ணறிவு தோற்கடித்து விடும்.
அதற்கு பிறகு அந்த புகைப்படமோ, ஆடியோவோ போலி என்பதை நிரூபித்து வெளிவருவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும்.
இதனால்தான், டெக்சாஸ், கலிஃபோர்னியா போன்ற மாநிலங்களில் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. தவறாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெற்றி மட்டுமே இலக்கு என்று நினைக்கும் அரசியல்வாதிகள் நிச்சயம் இதை வெகு விரைவிலேயே பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். அதை கண்காணிக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் தங்களை அதற்கு இணையாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Joe biden, US President