உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்திய அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வருகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தொழில்துறை, வேளாண்துறை, வெளியுறவுக் கொள்கை, நீர்ப்பாசனம் என பல்வேறு துறைகளிலும் பல்வேறு திட்டங்களை வகுத்து அந்த திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதால்தான் நமது இந்தியா இந்த அளவிற்கு இப்போது முன்னேறியுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்களும் பல்வேறு மக்கள் நலப் பணிகளைத் திறம்படச் செயல்படுத்தி வந்திருக்கிறார்கள். அப்படி தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. அது தான் பள்ளிகளில் இலவச உணவுத் திட்டம்.
குழந்தைகள் பள்ளி சென்று கல்வி கற்க வறுமை ஒரு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகத் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் உருவாக்கப்பட்டது தான் மதிய உணவுத் திட்டம். இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இந்த திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்தினார் காமராஜர்.
அதைச் சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன். அதன்பிறகு வந்த ஆட்சியாளர்களால் இந்த திட்டம் மிகவும் நல்ல முறையில் மேம்படுத்தப்பட்டு தான் இருக்கிறது. இப்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மாநகராட்சி பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இப்படி தமிழக அரசியல் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்காவில் இருக்கும் மின்னசோட்டா மாகாணத்தின் அரசு முன் வந்திருக்கிறது.
மின்னசோட்டா மாகாணத்தில் ஆளுநருக்கான தேர்தல் நடைபெற்றபோது, தேர்தலில் போட்டியிட்ட டிம் வால்ஸ் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிய மற்றும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அவர் வெற்றி பெற்று ஆளுநராகவும் இருக்கிறார். இந்நிலையில் தங்கள் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவை இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி அதற்கான உத்தரவில் டிம் வால்ஸ் நேற்று கையெழுத்திட்டார்.
அணைத்து மாணவர்களும் என்றால் அனைத்து பின்புலத்தைக் கொண்ட மாணவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். அவர்களின் பெற்றோர்கள் என்ன வருமானம் வாங்கினாலும் எல்லாருக்கும் உணவு வழங்கப்படும். இது மிகப்பெரிய சாதனை, இனி மாணவ, மாணவியர் பசியோடு இருக்க மாட்
டார்கள் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் டிம் வால்ஸ்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2.75 லட்சம் பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் என்கிறார் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் ஹதர் கட்ஸாவ்சன். இந்தக் குழந்தைகளில் ஆறில் ஒருவருக்கு முறையான உணவு தற்போது கிடைப்பதில்லை என்றும் ஹீதர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கொடி செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.