பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்துக்குப் பக்கபலமாக அமெரிக்கப் படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.
அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளம் மீது நேற்று முன்தினம் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ராணுவ தளம் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகக் கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளைக் குறித்து அமெரிக்கா ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. நேற்று ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதில் மேலும் ஒரு அமெரிக்க அதிகாரி படுகாயமடைந்தார்.
இதையடுத்து ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தவறாக நினைக்க வேண்டாம். ஈரானுடன் அரசியல் ரீதியாக அமெரிக்காவிற்கு மோதல் போக்கு இல்லை என்றாலும், சிரியாவில் இருக்கும் அமெரிக்கர்களைக் காப்பாற்ற மிக தீவிரமான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பைடன் எச்சரித்துள்ளார்.
Also Read : இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டி பொறுப்பேற்பு..!
அமெரிக்கா வான் தாக்குதல் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது நடக்கவில்லை என்றும், அங்குள்ள கிராம வளர்ச்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஈரான் அரசு கூறியுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சிரியாவின் அல்-ஓமர் எண்ணை வயல் பகுதியில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது ஈரான் ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கப்படையினர் ஈரான் ஆதரவு படையினர் மீது ட்ரோன்கள் மூலம் வான வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பான விபரங்களை சிரியாவில் இருக்கும் மனித உரிமை அமைப்பு கண்காணித்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரானுக்கு அணுசக்தி வழங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே அமெரிக்க-ஈரான் உறவு சுமுகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.