ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தார்கள் தலிபான்கள். கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணுவப் புரட்சி மூலம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினார்கள். தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தாலும், அவர்களின் அரசை உலகின் பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்கனவே திவாலாகி இருக்கும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பல்வேறு கடடுப்பாடுகளை விதித்துள்ளதால் மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ஆப்கன் நாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவ சீனாவும் பாகிஸ்தானும் கூட்டாக முன்வந்துள்ளன.
இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் க்யுன் காங் இஸ்லாபாத்தில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஆப்கானிஸ்தானில் சாலை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 4.90 லட்சம் கோடி செலவு செய்ய முடிவு செய்யப்பட்டது. BRI(Belt and Road Initiative)திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் சிதைந்து போயிருக்கும் ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்க முடியும் என சீனாவும் பாகிஸ்தானும் நம்புகின்றன. இரு தரப்பு ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் நெருக்கடியில் இருக்கும் ஆப்கன் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளும், பொருளாதார மீள் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரு நாடுகளின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More : வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டுமா? நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவுரை!
தலிபான் அரசின் முக்கிய பொருப்பில் இருக்கும் அமிர்கான் முத்தாகி இந்த சந்திப்பின போது சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார். அவர் முன்னிலையில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் ஹஃபிஸ் ஜியா அகமது கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சீனா முதலீடு செய்யவும் தொழில்கள் தொடங்கவும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக ஏற்கனவே தலிபான் அரசு சீனாவுக்கு உறுதியளித்திருந்தது.
அதன் மூலம் கடந்த ஜனவரி மாதம் சீனா-ஆப்கன் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி ஆப்கனின் அமு தர்யா பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்துக் கொள்ள சீனாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்கிற அச்சத்தில் வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஆப்கன் மத்திய வங்கியின் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என சீனாவும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த கூட்டு நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afganistan, China, Pakistan News in Tamil