ஜப்பானைச் சேர்ந்த ஒரு விவசாயி தன் தோட்டத்தில் விளைவித்த ஒவ்வொரு மாம்பழத்தையும் 19,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
முக்கனிகளில் ஒன்றுதான் மாங்கனி. இதன் சுவையை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாம்பழத்தை ஜப்பானிய விவசாயி ஒருவர் வித்தியாசமான முறையில் வளர்த்து, நம் இந்திய மதிப்பில் ஒவ்வொரு மாம்பழத்தையும் கிட்டத்தட்ட 19,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
ஹொக்கைடோ தீவின் ஒட்டோபுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஹிரோயுகி நககாவா. 2011ஆம் ஆண்டு முதல் நககாவா தனது பண்ணையில் இயற்கை முறையில் மாம்பழங்களை விளைவித்து விற்பனை செய்து வருகிறார். எண்ணெய் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் பிறகு மாம்பழ விவசாயத்திற்கு மாறினார்.
தான் விளைவிக்கும் மாம்பழங்களுக்கு 'ஹகுகின் நோ தையோ' என்ற பெயர் சூட்டியுள்ளார். அதாவது பனியில் சூரியன் என்பது தான் அந்தப் பெயர். இவர் தனது மாமரங்களைப் பனி சூழ்ந்த பசுமைக்குடிலில் வளர்க்கிறார். அதனால் தரமான நல்ல சுவையுடைய மாம்பழங்களை இவரால் விளைவிக்க முடிகிறது. அதனால் தான் இந்த பெயரை அதற்குச் சூட்டியுள்ளார்.
உலகின் மிக விலையுயர்ந்த இந்த மாம்பழங்களின் ரகசியம் என்னவென்றால் நககாவா இரண்டு இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது தான். குளிர்காலத்தில் பனியைச் சேமித்து அதைக் கோடைக்காலத்தில் தனது பசுமைக்குடிலைக் குளிர்விக்கப் பயன்படுத்துகிறார். அதே போல் குளிர்காலத்தில் தனது கிரீன்ஹவுஸை சூடேற்ற இயற்கையான வெப்ப நீரூற்றுகளைப் பயன்படுத்துகிறார். இதனால் தான் இயற்கையான சுவையான மாம்பழங்கள் கிடைக்கின்றன.
இந்த விவசாய முறையால் பூச்சியினங்கள் குறைவாக இருக்கும் குளிர்காலங்களில் பழுக்கத் தொடங்குகின்றன. அதனால் பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிகிறது. பூச்சிக்கொல்லிகளும் தேவைப்படுவதில்லை. அதோடு குளிர் காலங்களில் விவசாய வேலை செய்வோருக்கும் பெரும்பாலும் வேலை இருக்காது. அந்த நேரத்தில் குறைந்த செலவில் மாம்பழங்களை நககாவா அறுவடை செய்துவிடுகிறார்.
இவர் விளைவிக்கும் மாம்பழங்களுக்கு ஜப்பானில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி உண்டு. இந்நிலையில் நககாவா தன் பண்ணையில் விளையும் ஒரு மாம்பழத்தை 230 அமெரிக்க டாலர்கள் அதாவது நம் இந்திய மதிப்பில் 19,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டோக்கியோ நகரத்தில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்சில் நககாவாவின் ஒரு மாம்பழத்தை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அந்த மாம்பழத்தை வாங்கப் பலரும் போட்டிப் போட்டதால் அதன் விலையும் அதிகரித்தது. கடைசியில் அந்த மாம்பழம் 400 அமெரிக்க டாலருக்கு விலை போனது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 33,000 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.