அமெரிக்காவின் தெற்குப் பகுதி மாகாணமான மிசிசிப்பி அந்நாட்டின் மிகவும் முக்கியமான மாகாணங்களுள் ஒன்று. அங்கு நேற்று இரவு கடுமையான சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் மிசிசிப்பி-க்கு அருகில் இருக்கும் அலபாமா மாகாணத்திலும் சூறாவளியால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
மிசிசிப்பி மாகாணத்தில் மட்டும் சூறாவளியால் சுமார் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு தாக்கிய சூறாவளி மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகணங்களில் சுமார் 275 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இப்பகுதியின் மேற்கு திசையில் அமைந்துள்ள நகரமானா ரோலிங் ஃபோர்க் மிகவும் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. சூறாவளிக் காற்றின் வேகத்தால் இந்த நகரத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
ஏராளான கார்கள் தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளன. சூறாவளியால் பாதிக்கப்பட்ட ரோலிங் ஃபோர்க் மற்றும் சில்வர் சிட்டி உள்ளிட்ட நகரங்களை ஆளுநர் டேட் ரீவ்ஸ் நேரில் பார்வையிட்டார். அந்த நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அந்தப் பகுதிகளை ஆளுநர் அறிவித்துள்ளார். அங்குச் சீரமைப்பு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
சூறாவளி தாக்கியதில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தைச் சீராக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சூறாவளியால் பாதிக்கப்பட்ட மிசிசிப்பி மற்றும் அலபாமா மக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அதிபர் ஜோ பைடன் அறிக்கை வழியாக தெரிவித்துள்ளார்.
Also Read : தேர்தல் நடத்த நிதி அமைச்சகத்திடம் பணம் இல்லை.. பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
சூறாவளி தாக்கியதில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சூறாவளி மற்றும் புயல் மிசிசிப்பி மற்றும் அலபாமாவை தாக்கும் என அந்நாட்டுத் தேசிய பருவநிலை ஆய்வகம் அறிவித்திருந்ததாகவும், தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால் இந்த அளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிப்பதற்காகத் தேசிய பருவநிலை ஆய்வக அதிகாரிகள் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகாணங்களை நேரில் பார்வையிட்டு வருகின்றனர். அவர்களின் அறிக்கை வெளியான பிறகே உண்மையான சேத நிலவரம் குறித்துத் தெரிய வரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.