முகப்பு /செய்தி /உலகம் / மூட்டைப் பூச்சிகள் கடித்து சிறைவாசி உயிரிழப்பு..? - பீதியை கிளப்பும் அமெரிக்க வழக்கறிஞர்..!

மூட்டைப் பூச்சிகள் கடித்து சிறைவாசி உயிரிழப்பு..? - பீதியை கிளப்பும் அமெரிக்க வழக்கறிஞர்..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் மூட்டைப் பூச்சிகள் கடித்ததில் உயிரிழந்ததாக வழக்கறிஞர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் மூட்டைப் பூச்சிகள் மற்றும் பூச்சிகளால் கடித்து கொல்லப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் இருக்கும் சிறையில் சிறிய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட லாசன் தாம்ப்சன் என்ற 35 வயது நபர் 2022ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அடைக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து ஃபுல்டன் கவுண்ட்டி சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் சான்றிதழ் அளித்ததால் அவர்களுக்கான பிரத்யேக அறையில் அடைக்கப்பட்டார் தாம்ப்சன். மூன்று மாதங்கள் சிறைக்குள் இருந்த தாம்ப்சன் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி சிறை அறைக்குள் சலனமில்லாமல் கிடந்துள்ளார். சிறைக் காவலர்கள் தாம்ப்சனை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் தாம்ப்சன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாம்ப்சன் உயிரிழந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவரின் குடும்ப வழக்கறிஞர் இப்போது ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் முன்னணி நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள மைக்கில் டி ஹார்ப்பர் என்ற அந்த வழக்கறிஞர், தாம்ப்சன் உயிரோடு இருக்கும்  போதே மூட்டைப் பூச்சிகளாலும், மற்ற பூச்சிகளாலும் கடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நோயுற்ற ஒரு விலங்கை வைக்கக் கூட லாயக்கற்ற ஒரு அறையில் தாம்ப்சன் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், தாம்ப்சனின் மரணத்திற்கு சிறை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தாம்ப்சன் நோயுற்று அவதிக்குள்ளானதை சிறை ஊழியர்கள் அறிந்திருந்தும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்று மைக்கில் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மைக்கில் அளித்த புகாரின் அடிப்படையில் ஃபுல்டி கவுண்ட்டி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். தாம்ப்சனின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த புகாரில் கூறப்பட்டிருந்தது போல் நடந்திருந்தால் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறது காவல்துறை.

மூட்டைப் பூச்சிகள் கடித்து ஒருவர் உயிரிழப்பது வழக்கத்திற்கு மாறானது என்றும், ஆனால் தொடர்ச்சியாக, ஏராளமான மூட்டைப் பூச்சிகள் ஒருவரை கடித்தால் அவருக்கு மிக மோசமான ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறுகிறார் கெண்டகி பல்கலைகழக பூச்சியியல் துறை நிபுணர் மைக்கில் பாட்டர்.

தாம்ப்சன் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வித்தியாசமான குற்றச்சாட்டு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பூச்சிகள் கடித்து ஒருவர் உயிரிழக்கும் அளவிற்கு மிக மோசமான சிறை அறைகள் இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News