விண்வெளியை எவ்வளவு ஆராய்ந்தாலும் அதன் ஆச்சரியங்கள் எப்போதும் குறைவதே இல்லை. அதே போல பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்தது தான் விண்வெளிப் பயணமும். விண்வெளி பயணத்தின் போது வீரர்களின் அனுபவம் எப்படியிருக்கும், என்ன சாப்பிடுவார்கள்? எப்படி சாப்பிடுவார்கள்? உறங்குவார்களா? அங்கும் இரவு பகல் என மாறி மாறி வருமா? அவர்களின் உடை எப்படியிருக்கும்? இது போன்ற விசயங்களை அறிந்து கொள்வதற்கு நமக்கு எப்போதுமே ஆவல் இருக்கத்தானே செய்யும். அப்படி விண்வெளியில் வீரர்களின் உணவு மற்றும் தண்ணீர் பிரச்னை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை முன்னாள் நாசா விண்வெளி வீரர் நிகோல் ஸ்டோட் பிபிசி ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது நீண்ட பணிக் காலத்தில் இரண்டு முறை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற ஸ்டோட் அங்கே மொத்தம் 100 நாள்கள் இருந்துள்ளார். விண்வெளிப் பயணத்துக்கு என்று சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உணவை உண்டே அங்கு வாழ்ந்தாக அவர் குறிப்பிடுகிறார். ஈர்ப்பு விசை இல்லாத சூழ்நிலைக்கு ஏற்றபடி விண்வெளிப் பயணத்திற்கான உணவு வகைகள் திட்டமிடப்பட வேண்டும்.
சிந்திய துண்டுகள் மிதப்பதைத் தவிர்க்கவேண்டும் என்பதால் அங்கே ரொட்டி இருக்காது. அதற்குப் பதில் டார்டில்லாக்கள் எனப்படும் ரோல்கள் இருக்கும் என்கிறார் ஸ்டோட். அங்கே சாப்பிடும் உணவு, அவற்றின் எடையைக் குறைக்கும் வகையில் மிகவும் பதப்படுத்தப்பட்டதாக இருக்கும். உணவுப் பொருள்களில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டிருக்கும். சாப்பிடுவதற்கு முன்பாக, உணவை வெந்நீர், தண்ணீர் தெளிப்பானில் காட்டி ஈரமாக்கி உண்பார்களாம்.
விண்வெளியில் இருக்கும்போது உடம்பில் நீர்ச்சத்து அளவைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். ஆனால், தண்ணீர் எங்கிருந்து வரும்? பூமியிலிருந்து போகும்போதே விண்வெளி வீரர்கள் தங்களுடன் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு செல்வார்கள். மீதி தண்ணீர் தேவையை மறு சுழற்சி மூலமாகத் தான் நிவர்த்தி செய்து கொள்வார்களாம். எந்தெந்த தண்ணீரையெல்லாம் மறுசுழற்சி செய்து சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் ஸ்டோட் விளக்கியுள்ளார்.
விண்கலத்தின் எரிபொருள் செல்களில் இருந்து வரும் கழிவு நீர், ஈரப்பதம், சிறுநீர் ஆகியவை தான் தண்ணீருக்கான மூல ஆதாரங்களாம். என்னது சிறுநீரை மறுசுழற்சி செய்து குடிப்பதா என அருவருப்பாக நினைப்பவர்களுக்கு நாசா சொல்வது என்ன தெரியுமா? பூமியில் அருந்தும் தண்ணீரைவிட இங்கே வடிகட்டி வழங்கப்படும் தண்ணீர் தூய்மையானது என்கின்றனர்.
மேலும் விண்வெளி வீரர்களுக்கான உடை குறித்தும் நாசா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 1981 ஆம் ஆண்டிற்குப் பிறகு விண்வெளி வீரர்களுக்கான உடையில் குறிப்பிடப்படும்படியான மாற்றங்கள் ஏதும் செய்யப்படாத நிலையில் தற்போது அந்த உடையை இன்னும் சவுகரியமானதாக மாற்றி வடிவமைத்துள்ளது நாசா.
வரும் 2025 ஆம் ஆண்டு ஆர்டெமிஸ்-III திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் செல்ல இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் நிலவுக்கு செல்ல இருக்கிறார்கள். எனவே அனைத்து விதங்களிலும் மிகவும் மேம்பட்ட பயணமாக இது இருக்க வேண்டும் என்பதற்காக நாசா பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Space