100 ஆண்டுகளை கடந்து இன்றைக்கும், தெளிவான பதில் கிடைக்காத ஒரு சம்பவம், டைட்டானிக் கப்பல் ஏன், எப்படி மூழ்கியது என்பது தான். இந்த விபத்து நடந்து 100 ஆண்டுகள் ஆகியும், டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து பல அடிப்படைக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
1912ம் ஆண்டு ஏப்ரல் 10 தேதி, சௌதாம்டனிலிருந்து நியூ யார்க் நகருக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கிய டைட்டானிக் கப்பல், நான்கு நாட்கள் கழித்து, அதாவது, 1912ஆம் ஆண்டு ஏப்ரம் 14ம் தேதி, கடலில் மூழ்கியது. ஆழ்கடலில் மூழ்கிக் கிடந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1985-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின், அது குறித்து பெரிய அளவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், டைட்டானிக் கப்பல் குறித்து இதுவரை வெளியில் வராத அளவில் முழுமையான படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அட்லான்டிக் பெருங்கடலில், சுமார் முன்றேமுக்கால் கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை சுற்றி இன்றளவும் ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், டைடானிக் கப்பலை முழு அளவில் படம் பிடித்துக் காட்ட ஆழ்கடல் வரைபட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு தற்போது முப்பரிமாண காட்சிகள் தயாராகியுள்ளன. இதை வைத்து, உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த விவரங்கள் இக்காட்சிகளின் மூலம் ஓரளவுக்கு நன்றாகத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் தொழில்நுட்பம் கொண்ட ஒரு கப்பலில் இருந்த ஆய்வு குழுவினர், தொலைவிலிருந்து இயக்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் டைட்டானிக் கப்பலின் நீளம் மற்றும் அகலத்தைக் கண்டுபிடித்தனர். ஒவ்வொரு கோணத்திலிருந்தும் 7 லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து, அவற்றைக் கொண்டு முப்பரிமாண காட்சிகளை தயாரித்துள்ளனர்.
கடலின் மிக ஆழமான, இருள் சூழ்ந்த பகுதியில் இருப்பதால், இந்த ஆழ்கடல் வரைகலை தொழில்நுட்பம் மூலம் டைட்டானிக் கப்பல் முழுமையாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆய்வின் படி, டைட்டானிக கப்பல் கடலுக்கு அடியில், இரண்டு துண்டாக உடைந்து கிடக்கிறது. கப்பலின் முகப்பு ஒரு இடத்திலும், சுமார் 800 மீட்டருக்கு அப்பால், அதன் கீழ் பகுதி மற்றொரு இடத்திலும் கிடக்கிறது. கப்பலின் உடைந்த பல பகுதிகள் அப்பகுதியில் குவிந்துகிடப்பதாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஒரே வாரத்தில் 10 சிங்கங்களை விரட்டி விரட்டி கொன்ற பொதுமக்கள்... காரணம் என்ன தெரியுமா?
குறிப்பாக, கப்பலின் முகப்பு பகுதி, 100 வருடங்களுக்குப் பின்னும் எளிதில் அடையாளம் தெரியுமளவுக்கு இருந்தது ஆச்சரியமளிப்பதாக ஆய்வு குழு கூறியுள்ளது. கப்பலின் மேற்புறத்தில் இருந்த தளத்தில் உள்ள மிகப்பெரிய துளை, அங்கே நீண்ட படிக்கட்டுகள் இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாகவும், பல்வேறு உலோக கலவையால் செய்யப்பட்ட கப்பலின் பின்பகுதி ஆழ்கடலின் நிலப்பரப்பில் மண்ணுக்குள் புதைந்து கிடந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டைட்டானிக் கப்பலில் இருந்த சிறிய சிலைகள், பல்வேறு பானங்களுடன் கூடிய திறக்கப்படாத பாட்டில்கள் என ஏராளமான பொருட்களுடன், காலணிகளும் ஆங்காங்கே தென்பட்டதாக ஆய்வுக்குழு கூறியுள்ளது.
தற்போதைய படங்களில் பதிவாகியிருக்கும் கப்பலின் கீழ் பகுதியை ஆய்வு செய்தால், கடலின் நிலப்பரப்பில், டைட்டானிக் கப்பல் எப்படி மோதியது என்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும் எனவும், டைட்டானிக் விபத்து குறித்து முழுமையாக அறிந்து கொள்வதில் இனிமேலும் காலம் தாமதம் கூடாது என்பதை உணர்த்தும் வகையில், கடல் இயல்பாகவே டைட்டானிக் கப்பலை மெதுவாக அழித்து வருவதாகவும் இந்த ஆய்வு குழு கூறியுள்ளது. இந்த ஆய்வின் மூலம், 100 ஆண்டுகளாக கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் வரலாறு வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Passengers, Tamil News, Titanic