சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்குடன் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதையடுத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாரீஸ் நகரை எலக்ட்ரிக் வாகனங்களின் முன்னோடி எனலாம். ஏனென்றால் உலகிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முதன்முறையாக பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது பாரீசில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீசில் பப்ளிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் நீங்கள் நினைப்பது போல நம்மூரில் உள்ள ஸ்கூட்டர் கிடையாது. மாறாக நின்று கொண்டே பயணிக்கூடிய வித்தியாசமான ஸ்கூட்டர் இது. இதை பப்ளிக் ஸ்கூட்டர் என்று சொல்வார்கள். இந்த பப்ளிக் ஸ்கூட்டர்கள் நகரில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மக்களுக்கு இது தேவை என்றால் தங்கள் செல்போனில் ஸ்கேன்செய்து இதை எடுத்துப் பயன்படுத்தலாம்.
இதற்கான கட்டணத்தையும் செல்போன் மூலமே செலுத்த முடியும். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பாரீசில் பயன்பாட்டில் இருந்து வரும் பப்ளிக் ஸ்கூட்டர்களால் தற்போது நகரில் ஆங்காங்கே விபத்துகள் அதிகம் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நடந்த விபத்தில் 31 வயது பெண் ஒருவர் பலியானார்.
இந்நிலையில் இந்த ஸ்கூட்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்தது. ஆனால் இந்த ஸ்கூட்டர் சேவையை நடத்தி வரும் நிறுவனம் நகரில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் நடக்கும் விபத்து மிகக் குறைவு என விளக்கம் அளித்தது. இதனால் இந்த பிரச்சனைக்கு மக்களிடமிருந்தே முடிவைப் பெற விரும்பினார் பாரீஸ் மேயர் அனீ ஹிடால்கோ. இதற்காக வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்தார்.
பாரீஸ் நகரில் மொத்தம் 13.8 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 1,03,000 பேர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். இந்த வாக்கெடுப்பில் 91,300 பேர் பாரீஸ் நகரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என வாக்களித்துள்ளனர். இதனால் அந்த நகரில் பப்ளிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக இந்த ஸ்கூட்டர்களை வாங்கி பயன்படுத்த எந்த விதமான தடையும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : பின்லாந்து தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி.. தோல்வியை ஏற்ற பிரதமர் சன்னா மரின்
கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கும் இடங்களிலும் இந்த பப்ளிக் ஸ்கூட்டர்களில் நடை பாதைகளில் கூட 25 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சிலர் பயணிக்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட இந்த ஸ்கூட்டரை சட்ட ரீதியாகப் பயன்படுத்த முடிகிறது. இதனால் விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பிரச்னை கடந்த 2019ம் ஆண்டே துவங்கிவிட்டது. அப்பொழுதே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது. டிராஃபிக் விதிமுறைகளை மீறினால் 135 யூரோ அதாவது சுமார் 12 ஆயிரம் ரூபாய், அதிக வேகத்தில் பயணித்தால் 1.33 லட்சம், நடைபாதையில் பார்க் செய்தால் 3 ஆயிரம் ரூபாய் என அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி விபத்துக்கள் நடந்துவருவதால் பப்ளிக் ஸ்கூட்டர்களுக்கு பாரீஸ் நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Paris, Scooters