தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல்வேறு துறையில் முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. எத்தனையோ மாற்றங்களால் இன்று நாம் மிகவும் சொகுசான அதே நேரம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது தானியங்கி பேருந்துகள். இந்த பேருந்துகள் ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வகை பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்த பேருந்து சேவை 22 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும். ஒரே வழித்தடத்தில் இதே போல் ஐந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்தில் ஓட்டுநர் இருப்பார், ஆனால் அவர் இயக்காமல் பேருந்து தானாகவே இயங்கும். ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் மட்டும் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஓட்டுநர் பேருந்தைக் கையாள்வார்.
மேலும், பேருந்தில் நடத்துநரும் இருப்பார், அவர் பயணச் சீட்டு வழங்குவது, பயணிகளின் தேவைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பணிகளைக் கவனிப்பார். இந்த பேருந்து மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து, இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை நிறுவனத்தின் அதிகாரி பீட்டர் ஸ்டீவன் ஸ்டேஜ் கோச் கூறுகையில், ”தானியங்கி பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் முழுமையான தானியங்கி பேருந்து சேவையை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த பேருந்தில் ஆப்டிகல் கேமரா மற்றும் ராடார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்து சாலையில் பயணிக்கும் போது, அப்டிகல் கேமரா மற்றும் ராடார் உதவியோடு பேருந்து மற்ற வாகனங்களோடு மோதாமல் தடுக்கவும், சாலையில் ஜீப்ரா கிராசிங் போன்றவற்றில் மனிதர்கள் வரும் போது பேருந்தை நிறுத்தவும் முடியும். மேலும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பமும் இந்த பேருந்தில் இருக்கிறது. அதன் மூலம் பேருந்து எங்கிருக்கிறது, இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும், பேருந்து நிறுத்தத்தின் விபரங்கள் உள்ளிட்டவை கையாளப்படும்.
Also Read : செலவு செய்த பணத்தில் பாதியை தர வேண்டும் - முன்னாள் காதலிக்கு கெடு விதித்த காதலன்
இந்த பேருந்து சேவை மிகவும் பாதுகாப்பானது என்பதோடு இந்த பயணம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை நிச்சயம் வழங்கும் என்கிறார் ஸ்டீவன். அதோடு இந்தப் பேருந்துகள் எரிபொருளை மிகவும் சிக்கமாக கையாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவை வெற்றி பெற்றால் வரும் காலத்தில் இன்னும் நிறையத் தானியங்கி பேருந்துகளை இயக்கும் முடிவில் ஸ்டேஜ் கோச் நிறுவனம் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Bus