சுமார் 26 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட எரிக் கார்செட்டி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராக இருந்த கென்னத் ஜெஸ்டர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவிற்குத் திருப்பி அழைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அன்றிலிருந்து சமீப காலம் வரை இந்தியாவிற்கான தூதரை அமெரிக்கா நியமிக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவிற்கான தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான எரிக் கர்செட்டியை நியமிக்க அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் வழங்கியது. அவருக்கு அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கார்செட்டியின் மகள் மாயா, மனைவி ஆமி வேக்லேண்ட், தந்தை கில் கார்செட்டி உள்ளிட்ட மிகவும் நெருக்கமான வெகு சிலரே கலந்து கொண்டனர்.
நீண்டகால இடைவெளிக்குப் பின்பு நியமிக்கப்பட்ட தூதர்:
26 மாதங்களாக இந்தியாவிற்கான தூதரை அமெரிக்கா நியமிக்கவில்லை. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் இல்லாமல் இருந்த மிக நீண்ட காலமாக இந்த இடைவெளி பார்க்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான தூதராக இருந்த தாமஸ் பிக்கரிங் ரஷ்யாவிற்கான தூதராக மாற்றப்பட்டார். அதன் பிறகு சுமார் 14 மாதங்களாக இந்தியாவிற்கான தூதரை அமெரிக்காவின் பில் கிளிண்டன் அரசு நியமிக்கவில்லை.
அதன்பிறகு ஃபிரான்க் விஸ்னர் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு மிக நீண்ட காலம் இந்தியாவிற்கான தூதர் இல்லாமல் இருந்தது தற்போது தான். கடந்த ஜனவரி மாதம் கார்செட்டியை இந்தியாவிற்கான தூதராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறு பரிந்துரை செய்த போது, அதன் மீதான வாக்கெடுப்பின் அவசியம் குறித்தும், இந்தியாவிற்கான தூதர் மிக நீண்டகாலம் நியமிக்கப்படாமல் இருப்பது அரசியல் ரீதியாக சரியான நடவடிக்கை இல்லை என்றும் கார்செட்டியின் ஆதரவாளர்கள் வாதங்களை முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கார்செட்டியின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவிற்கான தூதராகத் தன்னை நியமனம் செய்யப் பரிந்துரைத்த அதிபர் ஜோ பைடனுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இந்தியத் தூதராகத் தனது பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றத் தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் கார்செட்டி கூறியுள்ளார்.
எரிக் கார்செட்டி இந்தியாவிற்கான தூதராகப் பொறுப்பேற்ற நிலையில் விரைவில் இந்தியாவில் தனது பணியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Kamala Harris