முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்கா நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது... ட்ரம்ப் குற்றச்சாட்டு...!

அமெரிக்கா நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது... ட்ரம்ப் குற்றச்சாட்டு...!

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா நரகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அமெரிக்க வரலாற்றின் இருண்ட நேரங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும்ட்ரம்ப் காட்டமாக விமர்சித்தார்

  • Last Updated :
  • Tamil Nadu |

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், தான் எந்த ஒரு குற்றத்தையும் செய்யவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு ட்ரம்ப் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அமெரிக்கா, நரகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக டிரம்ப் விமர்சித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் டிரம்ப் மீது, அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.  தேர்தல் சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் நெருக்கடிக்கு ஆளான டிரம்ப், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்கி, இந்த விவகாரம் குறித்து வெளியே பேசக்கூடாது என சமரசம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்காவில் இதுபோன்று பணம் வழங்கப்படுவது சட்டவிரோதம் இல்லை என்ற போதும், அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியானது.

இதையும் வாசிக்கபின்லாந்து மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா..!

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக புளோரிடாவில் இருந்து நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு டொனால்ட் டிரம்ப் வருகை தந்தார். அவரை முறைப்படி காவல்துறையினர் கைது செய்து கைரேகையை பதிவு செய்தனர். அதன்பின் நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே டொனால்ட் டிரம்ப் பதிலளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் நீதிபதி வாசித்தபோது, தான் குற்றவாளி இல்லை என்று டிரம்ப் பதிலளித்தார்.

இதையடுத்து, வன்முறையை தூண்டும் விதமாக பேசவோ, சமூகவலைதளங்களில் பதிவிடவோ கூடாது என்று டிரம்புக்கு அறிவுறுத்திய நீதிபதி,  வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு விசாரணையையொட்டி டிரம்ப் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடியதால் பரபரப்பு நிலவியது.

சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் இருந்த டிரம்ப், பின்னர் அங்கிருந்து நேரடியாக, புளோரிடாவில் உள்ள இல்லத்திற்கு விரைந்தார். அப்போது தனது ஆதரவாளர்களிடையே பேசிய டிரம்ப், அமெரிக்காவில் இப்படி எதுவும் நடக்கும் என்று தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார்.

அமெரிக்கா நரகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அமெரிக்க வரலாற்றின் இருண்ட நேரங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் காட்டமாக விமர்சித்தார். ஜனநாயகக் கட்சியினர் தனது தேர்தல் பிரச்சாரத்தை உளவு பார்த்ததாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

top videos

    இதனிடையே, டொனால்ட் டிரம்ப் மீதான விசாரணையில் அதிபர் ஜோ பைடன் கவனம் செலுத்தவில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதால் இதுகுறித்து கருத்து சொல்லவிரும்பவில்லை என்றும் அதிபர் ஜோ பைடன் வழக்கம்போல் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Donald Trump