முகப்பு /செய்தி /உலகம் / இலங்கையில் அமையும் சீன ரேடார் கண்காணிப்பு மையம்... என்ன செய்ய வேண்டும் இந்தியா..?

இலங்கையில் அமையும் சீன ரேடார் கண்காணிப்பு மையம்... என்ன செய்ய வேண்டும் இந்தியா..?

இலங்கையில் அமையும் சீன ரேடார் கண்காணிப்பு மையம்

இலங்கையில் அமையும் சீன ரேடார் கண்காணிப்பு மையம்

இந்தியா தன்னுடைய வெளியுறவு கொள்கையை ஸ்திரப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • interna, IndiaChinaChinaChina

இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையே பல நூறு ஆண்டுகளாக நட்புறவு நீடித்து வருகிறது. இந்த பிணைப்பு அறிவு சார்ந்த, பண்பாட்டு, மத மற்றும் மொழித் தொடர்பை அடிப்படையாக கொண்டுள்ளன. இதனால்  இந்தியாவும், இலங்கையை நெருங்கிய நட்பு நாடு என்றே கருதி வருகிறது.

கடந்தாண்டு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித்தவித்த போது, அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்தது. அதேபோல, இலங்கையும், இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணுவதாக தோன்றினாலும், அவ்வப்போது இலங்கையின் நடவடிக்கை இந்தியாவுக்கு பாதகமாக அமைகிறது.

அண்மைக்காலமாக சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இலங்கை எடுத்து வருகிறது. தற்போது, இலங்கையின் தேவேந்திரமுனை பகுதி அருகே ரேடார் கண்கானிப்பு மையம் அமைக்க சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனெனில், இந்த ரேடார் கண்காணிப்பு மையம் அமைந்தால், இந்திய பெருங்கடல் பகுதி உட்பட தென்னிந்தியாவை முழுமையாக கண்காணிக்க முடியும்.

கடந்த காலங்களில், இலங்கை எடுத்த முடிவுகளும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. அதை பொருட்படுத்தாது இலங்கை சீனாவுக்கு ஹம்பந்தோட்ட துறைமுகத்தை குத்தகைக்கு விட்டுள்ளது. இங்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை சீனா அமைத்து வருகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் யுவாங் வாங்-5 உளவுக்கப்பல் இலங்கையில் நிறுத்தப்படுவதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. சீனாவின் அழுத்ததிற்கு பணிந்த இலங்கை அந்த உளவு கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்திக்கொள்ள 7 நாட்களுக்கு அனுமதி வழங்கியது.

அதே போல, 2014ல் சீனாவின் நீர் மூழ்கி கப்பல் மற்றும் போர் கப்பல்களை கொழும்பு துறைமுகம் வருவதற்கு இலங்கை அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர். இந்தியாவின் ஆட்சேபனையை மீறி இலங்கை இந்த மூன்று முக்கிய தருணங்களில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது யாழ்பானம் அருகே கட்டப்பட்டு வரும் இலங்கை இராணுவ மையம் 500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த ராணுவ மையத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் சுமார் 150 ஏக்கர் நிலம் சீனாவின் ரேடார் கண்காணிப்பு மையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்பகுதியில் சீனாவின் கண்காணிப்பு மையம் அமைந்தால் தரை, வான்பரப்பு, கடல் தளங்களை எளிதில் கண்காணிக்க முடியும் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம், நிலம் மட்டுமல்ல, இந்திய பெருங்கடலையும் தன்னுடைய கட்டுப்பாடில் கொண்டுவரும் சீனாவின் முயற்சியாகவே இந்த நடவடிக்கைகள் கருதப்படுகிறது.

நீர் வழித்தடத்தில் நடைபெறும் வர்த்தகமும், கடலில் இருக்கும் வளங்களும், நீருக்கான போரை முன்கூட்டியே தொடங்கி வைத்துள்ளது. சீனாவின் கடன் வலையில் சிக்கி தவிக்கும் இலங்கை தன்னுடைய இறையாண்மை காப்பாற்ற போராடுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்தியா தன்னுடைய வெளியுறவு கொள்கையை ஸ்திரப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

First published:

Tags: China, India, Sri Lanka