சீனாவில் இருந்து வெறும் 100 மைல் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு தீவு நாடு தைவான். நடப்பாண்டு கணக்குப்படி தைவானின் மக்கள் தொகை வெறும் 2.39 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும் உள்ளது.
17ஆம் நூற்றாண்டில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த குட்டி தீவு நாடு. 1895ஆம் ஆண்டு ஜப்பானுடன் ஏற்பட்ட போரில் தோற்றதால், ஜப்பானுக்கு கைமாறியது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்றதால் மீண்டும் தைவான் தீவு 1945ஆம் ஆண்டு சீனா வசமே வந்தது.
உள்நாட்டு போர் தீவிரமடைந்த நிலையில் 1949ஆம் ஆண்டு மாசே துங் சீனாவின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்துக்கொண்டார். அன்று முதலே தைவான் தங்களை தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை தைவான் தனது ஒருங்கிணைந்த அங்கம் என்றே சீனா உரிமை கொண்டாடி வருகிறது. 13 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
பல ஆண்டுகளாக தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா போராடி வரும் நிலையில், அமெரிக்கா அவ்வப்போது தைவானுக்கு உதவி வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றார். இதனால் கோபமைடந்த சீனா, தைவான் அருகே போர்ப் பயிற்சியை தீவிரப்படுத்தியது.
உலகளவில் கணினி சிப் தயாரிப்பில் 65 விழுக்காடு அளவு தைவானில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. அத்தனை பெரிய சீனாவால் வெறும் 5 விழுக்காடு அளவு மட்டுமே சிப் தயாரிக்க முடிகிறது. கணினி சிப்களை குறைந்த விலையில் தயாரித்து தருவதால் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும் தைவானுக்கு தேவையான ஆயுதங்களையும் அமெரிக்கா தந்து உதவி வருகிறது.
அமெரிக்க சபாநாயகர் தைவான் வந்ததால் ஏற்கனவே கடும் கோபத்தில் சீனா இருந்து வந்தது. நிலைமை இப்படி இருக்க கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக தைவான் அதிபர் Tsai Ing-wen அண்மையில் அமெரிக்கா சென்று நாடு திரும்பினார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற சீனா தனது 9 போர்க்கப்பல்களை தைவானின் அருகே நிறுத்தியும், 70க்கும் மேற்பட்ட போர்விமானங்களை அனுப்பியும் தைவானை மிரட்டி வருகிறது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4ல் ஒரு பகுதி அளவே உள்ள குட்டி தைவான் நாடு, பிரமாண்டமான சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடி வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China