என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் உண்டு. அதை அறிவியல் துணைகொண்டு சாத்தியமாக்கியுள்ளார் அமெரிக்கத் தொழில் அதிபர் ஒருவர்.
வயசானாலும் உன்னோட ஸ்டைலும் அழகும் உன்னவிட்டு போவலை என்று படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து நடிகை ரம்யாகிருஷ்ணன் கூறும் வசனம் மிகப்பிரபலம். ஏனென்றால், வயதானாலும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைப்படுவர்.
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் இந்த ஆசை வாழ்வில் ஒருமுறையாவது வந்து போகும். ஆனால் இதைச் சாத்தியமாக்கிக் கொள்ள ஒரு சிலர் உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள், நடிகர்கள், பிரபலங்கள், இதற்கென கடுமையாகச் சிரத்தை எடுத்துக்கொண்டு உணவுக் கட்டுப்பாடு, தோல் சிகிச்சை, சிகை அலங்காரம், என்று தங்களின் தலை முடி முதல் பாதம் வரை பராமரிக்க தனித்தனி நிபுணர்களை வைத்துக்கொள்வர்.
ஆனால் உடலில் தோன்றும் முதிர்ச்சியை ஓரளவு தான் மறைக்க முடியும். முதிர்ச்சி மட்டுமல்ல அதனால் ஏற்படும் மரணத்தையும் நம்மால் தடுக்க முடிவதில்லை. முதிர்ச்சி- மரணம் இரண்டுக்கும் முக்கிய காரணம், செல்களின் செயல்திறன் குறைவதே ஆகும். இதனால் செல்களின் செயல் திறனை அதிகரித்து, உங்களின் உடலின் வயதை இளமையாக வைத்துக்கொண்டால், நீண்ட ஆயுள் வாழ முடியும் என்று நிரூபித்துள்ளார் பிரையன் ஜான்சன் என்றவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபரான பிரையன் ஜான்சனின் வயதை எப்படிக் கணக்கிடுவது என்பது சற்று சிக்கலானது தான். அதாவது பிறந்த தேதியின் அடிப்படையில் அவரின் வயதோ 45. ஆனால் அவரின் உடல் உறுப்புகளின் வயதோ வேறு. அதாவது அவரின் தோலின் ஆரோக்கியத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டால் அவரின் வயது 28 என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
இவரின் நுரையீரல் 18 வயதைப் போல ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல இதயத்தின் வயதோ 37 தான் என்று கணக்கிடப்படுகிறது. என்றும் 18 வயதாக இளைஞனாக இருக்க வேண்டும் என்ற கனவை எட்ட இவர் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளைக் கேட்டால் மலைக்க வைக்கிறது.
அதாவது காலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பிரையன் ஜான்சன், காலை உணவை 6 மணிக்கு எடுத்துக்கொள்கிறார். உணவில் அசைவ உணவைத் தவிர்த்து விட்டு, முற்றிலும் காய்கறி பழங்களை மட்டுமே உட்கொள்கிறார். கட்டாயம் உடற்பயிற்சி என்பதும் இந்த சிகிச்சை முறையில் ஒன்றாக உள்ளது. அதாவது உணவைப் பொறுத்தவரைத் தினசரி 1977 கலோரி சத்துக்களைக் கொண்ட உணவை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். ஒரு கலோரி கூடுதலாகவோ,குறைவாகவோ எடுக்கக்கிடையாது.
அரை மணி நேரத்தில் 20 ஆயிரம் சிட் அப்கள் மேற்கொள்வதற்கு இணையான உடற்பயிற்சிகளை இவர் மேற்கொள்வதையும் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக தினசரி பிரத்யேகமாக பரிந்துரைக்கப்பட்ட 54 சத்து மாத்திரைகளை அவர் எடுத்துக்கொள்கிறார்.
தன்னை இளமையாக வைத்துக்கொள்ள ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் ரூபாயை இவர் செலவிடுகிறார். ஆண்டுக்கு 16 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. அறிவியல் படி ஒருவரின் ஆயுட்காலத்தை தீர்மானிப்பதில் 7% மட்டுமே அவரின் ஜீன்கள் தீர்மானிக்கிறது. 93% அவரின் வாழ்க்கை முறையே தீர்மானிக்கிறது. அதனால் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.