காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், இஸ்லாமிய தலைவர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில், கடந்த 9 ஆம் தேதி இரு தரப்பினர் இடையே மோதல் தீவிரமடைந்தது. தனி நாடு கோரிக்கையை முன்வைத்து போராடி வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த காதர் அட்னான் என்பவரை இஸ்ரேல் கைது செய்த நிலையில், அவர் 3 மாதங்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து சிறையிலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பின் காசா பகுதியில் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், முதற்கட்டமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேலிய படை நடத்திய வான்வழில் தாக்குதலில் 5 அடுக்குமாடி கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதலில், 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் 6 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தைச் சேர்ந்த ராணுவ படையின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோரும் அடங்குவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. காசா பகுதியில் இருந்து ஏவுகணைகளை வீசி பாலஸ்தீனம் நடத்திய பதில் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எகிப்தின் மத்தியஸ்த முயற்சிகளால் அமைதி திரும்பி இருந்த நிலையில், மீண்டும் இந்த மோதல்கள் வெடித்துள்ளன.இது தொடர்பாக இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும் எந்த பலனையும் அது தரவில்லை என்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்களின் 5 தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை சண்டை நிறுத்தத்துக்கு இடமில்லை என்று காசாவின் ஹமாஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை நோக்கிதான் தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் எல்லைக்குள் நுழைவதற்கான Beit Hanoon Crossing சாலையை அந்நாட்டு அரசு மூடியுள்ளது. காசாவில் போதிய வசதிகள் இல்லாததால் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பெற இஸ்ரேல் செல்லும் பாலதீஸ்னர்கள், இதனால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gaza Issue, Israel