தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் அடர்ந்த அமேசான் மழைக்காடுகள் உள்ளன. இந்த மழைக்காடுகளை ஒட்டிய கிராமங்களுக்குள் கடந்த மே 1ம் தேதி ஒரு குடும்பம் சிறிய ரக விமானத்தில் பயணித்தது.
இதில் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானி சென்றுள்ளார். விமானத்தில் சென்ற ஏழு பேரில் 4 பேர் குழந்தைகள் ஆவர். இந்நிலையில், விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இன்ஜினில் பழுது ஏற்பட்டது. விமான அவசரநிலையை அறிவித்த நிலையில், கட்டுப்பாடு இல்லாமல் விமானம் வனப்பகுதியில் சிக்கி விபத்துக்குள்ளானது.
அந்நாட்டு அரசு தகவல் அறிந்து 150 ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள், பழங்குடி மக்கள் ஆகியோரை கொண்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் மாபெரும் தேடுதல் வேட்டையை நடத்தியது. தேடுதல் வேட்டை நடைபெற்ற 2ஆவது வாரத்தில் 3 பெரியவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், 4 குழந்தைகளை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
குழந்தைகளை தேடிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் கட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே உணவு பொட்டலங்களை போட்டது. மேலும், அனைவரும் ஒரே இடத்தில் இருங்கள் என ஒலி பெருக்கி மூலம் தகவல்கள் தரப்பட்டன. இந்நிலையில், விபத்தில் குழந்தைகள் உயிர் பிழைத்திருப்பார்கள் என்ற அரசு மீட்பு குழுவினரின் நம்பிக்கை வீண் போகவில்லை.
விபத்து நிகழ்ந்து 40 நாள்கள் கழித்து அந்த 4 குழந்தைகளும் காட்டுப் பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை தொடங்கி 4,9,13 வயது சிறார்கள் அடக்கம். இந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் இவர்கள் எப்படி 40 நாள்கள் உயிர்பிழைத்து வாழ்ந்தனர் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
இதையும் படிங்க: மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பார்வையற்ற கிராமம்.. அதிர்ச்சியளிக்கும் காரணம்!
மீட்கப்பட்ட சிறுவர்களை ராணுவம் போகோடா பகுதிக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மாயமான குழந்தைகள் மீட்பு பணியை அந்நாட்டு அதிபர் கட்ஸ்சவ் பெட்ரோ தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தார். குழந்தைகள் மீட்கப்பட்டதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்த அவர் இது ஒரு மகத்தான போராட்டத்திற்கான அடையாளம், இவர்கள் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்கள் என்றார்.
இந்த குழந்தைகளின் குடும்பத்தார் Huitoto என்ற பழங்குடி வகையை சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே இவர்களுக்கு மழைக்காடுகளில் தப்பி வாழ்வது எப்படி எனத் தெரிந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை பலரும் நெகிழ்ச்சியுடன் ஆச்சரித்துடன் பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Colombia, Flight Accident, Plane crash