முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / Hung assembly: கர்நாடகம் அதிகம் சந்தித்த தொங்கு சட்டமன்றம் என்றால் என்ன தெரியுமா?

Hung assembly: கர்நாடகம் அதிகம் சந்தித்த தொங்கு சட்டமன்றம் என்றால் என்ன தெரியுமா?

தொங்கு சட்டமன்றம்

தொங்கு சட்டமன்றம்

கர்நாடகாவின் முந்தைய தேர்தல் முடிவுகளில் "தொங்கு சட்டமன்றம்"  என்ற வார்த்தை பயன்பாட்டைக் கூட நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

  • Last Updated :
  • Karnataka |

கர்நாடகாவின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக இருக்கின்றன. பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று  மும்முனைப் போட்டி நிலவுகிறது. 36 வாக்கு என்னும் மையங்களில் இன்று காலை  8 மணி முதல் வாக்கு என்னும் பணி நடைபெற்று வருகிறது. கர்நாடக சபையின் ஆட்சியைப் பிடிக்கப்போவது  யார் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்த நேரத்தில் கர்நாடகாவின் அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் 1980 களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அரசியல் முறையை நீங்கள் கவனிக்க முடியும்.  காங்கிரஸ், ஜனதா தளம், பா.ஜ.க என்று ஆட்சி அமைந்திருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட நிலையை அவர்கள் கடந்து வந்திருப்பதைக் காணலாம்.

அந்த நேரத்து செய்திகளில் "தொங்கு சட்டமன்றம்"  என்ற வார்த்தை பயன்பாட்டைக் கூட நீங்கள் அதிகம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அந்த தொங்கு சட்டமன்றம் அல்லது தொங்கு பாராளுமன்றம் என்றால் என்ன என்று சிந்தித்ததுண்டா? அது எப்போது எல்லாம் இடம்பெறும் என்று தெரிந்துகொண்டதுண்டா? இப்போது தெரிந்து கொள்ளலாம்.

'எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம்' என்ற நிலையைத் தான் தொங்கு நாடாளுமன்றம் அல்லது hung parliament என்று  வரையறுக்கப்படும். மத்திய அரசின் நிலைக்கு அது தொங்கு பாராளுமன்றம். அதுவே மாநிலங்கள் அளவில் நடந்தால் அது தொங்கு சட்டமன்றம் என்று குறிப்பிடப்படும். அடுத்து தனிப்பெரும்பான்மை என்றால் என்ன என்ற சந்தேகம் எழும்.

பொதுவாக நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி சட்டமன்றமாக இருந்தாலும் சரி ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், அந்த சபையின் மொத்த சீட் எண்ணிக்கையில் 50% +  1 என்ற எண்ணிக்கையில்  வேண்டும். உதாரணமாக இப்போது நடந்து முடிந்த கர்நாடக தேர்தலையே  எடுத்துக்கொள்வோம்.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 தொகுதிகள்  உள்ளன. இந்த சட்டமன்றத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்தது அதில் பாதி 224/2 = 112 என்ற எண்ணிக்கையை விட கூடுதலாக 1 சீட் , அதாவது 112+1 = 113 சீட்டை பெற வேண்டும். அப்படி இருந்தால் தான் பெரும்பான்மையைப் பெற்றதாக பொருள். அவர்கள் தான் ஆட்சியை அமைக்க தகுதி பெற்றவர்கள்.

அப்படி பெற முடியவில்லை என்றால் அந்த மாநிலத்தின் ஆளுநர் அதிகபட்ச இடங்களைப் பெற்றுள்ள கட்சியின் தலைவரை அழைத்து, ஆட்சி அமைத்து 'நம்பிக்கை தீர்மானத்தை' நிறைவேற்ற சொல்வார். அந்த அளவுக்கு அதிகபட்ச சீட்டுகள் பெறாமல், அதில் போட்டியிட்ட பெரும்பாலான கட்சிகள் கிட்டத்தட்ட ஒரே அளவிலான சீட் எண்ணிக்கைகள் பெற்றிருந்தால் அது தொங்கு சட்டமன்றம் என்று அழைக்கப்படும்.

இதையும் பாருங்க : Karnataka Election Results 2023 Live: சன்னபட்னா தொகுதியில் ம.ஜ.த தலைவர் குமாரசாமி முன்னிலை

அதற்கும் கர்நாடக தான் சரியான எடுத்துக்காட்டு. 2004 தேர்தலில், பா.ஜ.க 79 இடங்களையும், காங்கிரஸ் 65 இடங்களையும் , ஜனதா தளம் 58 இடங்களையும் பெற்றிருந்தது. எந்த கட்சியும் அதிக வித்தியாசத்தில் சீட்களைப் பெறவில்லை. இந்த நிலை தான் தொங்கு சட்டமன்றத்தை சரியாக விளக்கும் எடுத்துக்காட்டு.

இப்போது இதில் யாரையும் தனித்து ஆட்சி அமைக்க ஆளுநரால் அழைக்க முடியாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து பெரும்பான்மை எண்ணிக்கையை அதாவது 50% +  என்ற எண்ணிக்கையை அடைய முடிந்தால் மட்டுமே ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் அனுமதி கோர முடியும். அந்த அடிப்படையில் ஜனதா தளம்- காங்கிரஸுடன் கைகோர்த்து 58+65 =123 என்ற பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

இப்படி தான் தொங்கு சட்டமன்றத்திற்கு தீர்வு காண முடியும். இப்படி கூட்டணி  சேரும் கட்சிகள், இடையில் கூட்டணியைக் கைவிட்டாலோ அல்லது சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவில் இருந்து விலகினாலோ மீண்டும் தொங்கு சட்டமன்ற நிலைக்குத்தான் போகும். அதன் பின் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்க வேண்டும். அல்லது புதிய தேர்தல் நடைபெறும்.

இந்த நிலை இந்திய நாட்டின் மாநிலங்களில் அதிகம் பார்த்த மாநிலம் கர்நாடகா. இதுவரை 5 முறை ஆளுநர் ஆட்சி அமல்  படுத்தப்பட்டுள்ளது. 22 முதல்வர்களை அந்த மாநிலம் சந்தித்துள்ளது. ஆனால் 1980 களில் இருந்து எந்த முதல்வரும் முழு ஆட்சி காலமான 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    இன்று வெளியாகும் முடிவுகள் இந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்று  ஏதேனும் ஒரு கட்சியின் ஆட்சியை பெறுமா அல்லது மீண்டும் தொங்கு சட்டமன்றமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க உள்ளது. அதனாலேயே இந்த முடிவுகளுக்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னிந்தியாவில் பா.ஜ.க முதலில் ஆட்சியைப் பிடித்த மாநிலமான கர்நாடகாவில் மீண்டும் அதன் கொடியை நாட்டுமா என்ற ஆர்வமும் வலுத்து வருகிறது.

    First published:

    Tags: Election, Karnataka Election 2023