ஈரோடு மாவட்டம் கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கேயம்பாளையம் என்கின்ற ஊரில் இருபுறமும் சாகா பொன்னி என அழைக்கப்படும் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது நட்டாற்றீசுவரர் கோவில்.
இந்தக் கோவிலுக்கு செல்ல ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் சாவடிப்பாளையம் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் இயற்கையை ரசித்தபடியே பயணம் செய்தால் காங்கேயம்பாளையம் கிராமத்தை அடையலாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று எங்கும் சிறப்புற்று இருப்பது உலகறிந்தது. அன்பே சிவம் என்பதையும் தாண்டி சிவமே அன்பு என்பது கடவுள் பக்தியின் அழகியல்.
கரைபுரண்டோடும் காவிரி. அதன் நடுவே, பிரணவ உருவாய் திகழும் சிவாலயம். இங்ஙனம் ஆற்றின் நடுவில் கோயில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்களை ஏற்றுத் திகழ்கிறார் சிவபிரான்.
இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவனை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம். தம்பதிகளுக்கு இடை யேயான பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்று பக்தர்களின் மனதில் அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்திருக்கும் சிவக்ஷேத்திரம்.
இப்படி ஒருஅற்புதத் தலம் எங்கிருக்கிறது?
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள ஊர் காங்கயம்பாளையம். இங்குதான் காவிரியின் நடுவில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு நட்டாற்றீஸ்வரர். கயிலையில் நிகழ்ந்த சிவ-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை தென்புலம் அனுப்பினார் சிவனார். அத்துடன், வேறு சில அரும் பணிகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அப்பணிகள் ஐந்து என்றும், அவற்றில் இரண்டாவது நட்டாற்றீஸ்வரர் திருத்தலத்தை உருவாக்குவது என்றும் தெரிவிக்கின்றன புராணங்கள்.
இந்தக்கோவிலில் அமைந்துள்ள சோழர் காலத்து கல்வெட்டு சொல்லும் வரலாறு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மராகிய. ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு அஞ்சாவது பூன்றுறைநாட்டு செம்மன்குறிச்சி செல்வன் கொற்ற மூக்க நான ஏகவீர மாராயன் மகன் பட்டில் மன்றாடி மூக்க சாத்தன் ஆன இராசேந்திர சிங்க காமிண்டன் மண்டபமும் எடுப்பிச்சான் கோயிலும் புதுக்குவிச்சேன் இத்தன்மம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Local News, Religion18, Tourist spots