முகப்பு /செய்தி /ஈரோடு / 13 குழந்தைகளுக்கு பிறகும் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளாத தம்பதி - போராடி தந்தைக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த மருத்துவ குழு!

13 குழந்தைகளுக்கு பிறகும் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளாத தம்பதி - போராடி தந்தைக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த மருத்துவ குழு!

கருத்தடை சிகிச்சை

கருத்தடை சிகிச்சை

Erode family planning | ஏற்கனவே 12 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த வாரம் 13வது குழந்தையை பெற்றெடுத்துள்ளனர் இந்த தம்பதியினர்.

  • Last Updated :
  • Erode, India

ஈரோடு அருகே 13 குழந்தைகளை பெற்ற பிறகும் குடும்ப கட்டுப்பாடு செய்ய மறுத்தவருக்கு கடும் முயற்சிக்கு பிறகு மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி. இங்குள்ள ஒன்னகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னமாதன் (46)- சாந்தி (45) சோழக பழங்குடியின தம்பதியினர். இருவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டும்,‌ கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 12 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சாந்தி மீண்டும் கருத்தரித்தார்.

சாந்தி கருத்தரித்து இருந்ததை அறிந்த மருத்துவ குழுவினர் அவரின் வீட்டுக்குச் சென்று அவருக்கு அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம் ஏற்படும் உடல் பிரச்சினைகளை எடுத்து கூறி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுரை வழங்கினார். எவ்வளவு எடுத்துக் கூறியும் அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டார் சாந்தி.

இதே போல் ஒவ்வொரு முறையும் மருத்துவ குழுவினர் செல்லும் போதெல்லாம் சாந்தி வெவ்வேறு பகுதிக்கும், வனப்பகுதிக்குள்ளும் சென்று மறைந்து கொள்ளுவார். மேலும் அவரது கணவரான சின்ன மாதன், அங்கு வந்த மருத்துவக் குழுவினரை வசைப்பாடி அனுப்பி விடுவார். இதன் காரணமாக மருத்துவ குழுவினர் நொந்து போனார்கள்.

இதையும் படிங்க : மளிகை கடையில் வாங்கிய சாக்லேட்டில் புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி!

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாந்தி மீண்டும் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த ஆண் குழந்தை உடன் சேர்த்து மொத்தம் சாந்திக்கு 13 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அதில் 8 ஆண் குழந்தைகள் 5 பெண் குழந்தைகள் ஆகும்.  அதில் ஒரு முறை இரட்டை குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். இதுவரையிலும் மருத்துவமனைக்கு சாந்தி சென்றதே இல்லை. சாந்தி 13 குழந்தைகளையும் வீட்டிலேயே பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் பிறந்த ஆண் குழந்தைக்கு தற்போது 25 வயது ஆகி அவருக்கு திருமணமும் நடைபெற்று அவர் மனைவியுடன் வெளியூரில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே நேற்று அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர், காவல் துறையினர் வருவாய்த்துறையினர் என ஒரு அரசு நிர்வாகமே சின்ன மாதனின் வீட்டிற்கு சென்று பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு, உடல்நலத்தை பரிசோதித்தனர்.

குழந்தை 3 கிலோ எடையுடன் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்த மருத்துவ குழுவினர், சாந்தியின் உடலை பரிசோதனை செய்ததில் ரத்ததின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது.

இதை அடுத்து சாந்தியிடம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருமாறு எடுத்துரைத்தனர், எவ்வளவோ எடுத்துக் கூறியும் சாந்தி வர மறுத்துள்ளார். சின்ன மாதனிடம் மருத்துவர் சக்தி கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சின்ன மாதன் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்தார்.

சின்ன மாதன் சம்மதத்தை அடுத்து உடனடியாக அங்கிருந்து மருத்துவர் சக்தி கிருஷ்ணன் குடும்ப நல இணை இயக்குனர் ராஜசேகரனுக்கு தகவல் அளித்தார்.

உடனடியாக இணை இயக்குனர் ராஜசேகரன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை நிபுணர் ஹரி பிரகாஷை அழைத்துக் கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதேபோல் பர்கூர் மலைப்பகுதியில் இருந்து சின்னமாதனை அழைத்துக் கொண்டு மருத்துவ குழுவினரும் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு வைத்து சின்னமாதனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வழியாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னர் சின்ன மாதன் நலமுடன் 102 வாகனம் மூலம் அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து குடும்ப நல இணை இயக்குனர் ராஜசேகரன் கூறியபோது; ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிகவும் பாதுகாப்பானது என்று தெரிவித்தவர்.

இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் ஆண்மை குறைபாடு ஏற்படும் என தவறான புரிதல் ஆண்களிடம் உள்ளது. ஆனால் எந்த ஒரு ஆண்மை குறைவும் ஏற்படாது.

அதேபோல் அவர்கள் எப்பதும் போல் தாம்பத்யத்தில் ஈடுபடலாம் என்றும், எந்தவித பக்க விளைவுகள் இல்லை என்றும் தெரிவித்தார். எனவே இதுபோன்று மலைப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பாதுகாப்பான இந்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

பர்கூர் மலைப்பகுதியை பொறுத்தவரை சோழகர் இன பழங்குடியினர் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்து வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: தினேஷ், ஈரோடு.

    First published:

    Tags: Erode, Local News