முகப்பு /செய்தி /ஈரோடு / குதிரைக்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்... ஈரோட்டில் விநோதம்...!

குதிரைக்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்... ஈரோட்டில் விநோதம்...!

குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப்பார்த்த கிராம மக்கள்

குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப்பார்த்த கிராம மக்கள்

குதிரைக்கு கிராம மக்கள் வளைகாப்பு செய்துள்ள சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

அந்தியூர் அருகே கிராமத்தில் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட குதிரைக்கு கிராம மக்கள் வளைகாப்பு செய்து பணமொய் செய்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அம்மன் பாளையம் கிராமத்தில்  அம்மன்பாளையம்  அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு பக்தர்கள் கால்நடைகளை நேர்த்தி கடனாக நேர்ந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் நேர்த்திக் கடனாக பெண் குதிரை ஒன்றை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

கிராம மக்கள் அந்த குதிரையை பராமரித்து வந்த நிலையில் குதிரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கருவுற்று தற்பொழுது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளது. இந்த நிலையில் கிராம மக்கள் கர்ப்பிணியாக உள்ள குதிரைக்கு வளைகாப்பு நடத்துவதாக முடிவு செய்து வளைகாப்பு செய்வது போல சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அதன் பின்னர் கருவுற்ற குதிரைக்கு புது பட்டு சேலை உடுத்தி,மஞ்சள் கயிறு கட்டி, வளையல்கள் அணிவித்து, தயிர் சாதம், புளி சாதம், பருப்பு சாதம், தக்காளி சாதம், என ஏழு வகை சாதங்கள் செய்து குதிரைக்கு ஊட்டி விட்டு சீர்வரிசையாக கொண்டு வந்த மாம்பழம், வாழைப்பழம், அண்ணாச்சி, திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழங்களை கொடுத்து வெகு விமர்சையாக வளைகாப்பு விழா நடத்தினர்.

பல்வேறு இடங்களில் செல்ல பிராணிகளுக்கு மட்டுமே சிலர் திருமணம் செய்து அழகு பார்த்து வரும் நிலையில் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட குதிரைக்கு கிராம மக்கள் வளைகாப்பு செய்துள்ள சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்றால் மொய் செலுத்துவது போல குதிரைக்கும் மொய் செலுத்தினர். பின்னர்  பழங்கள் மற்றும் பழங்களை  குதிரைக்கு ஊட்டிவிட்டி  வாழ்த்தி சென்றனர்.

செய்தியாளர் - தினேஷ் (ஈரோடு)

First published:

Tags: Erode