உதயநிதி நடிப்பில் கண்ணை நம்பாதே திரைப்படம் என்று வெளியாகி உள்ளது திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு.மாறன் இந்த 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார். அன்று இரவே பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது. அதை பார்க்கும் உதயநிதி, பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு விட்டு அவரின் காரை எடுத்து வருகிறார். அத்துடன் மறுநாள் காலை அந்தக் காரை பூமிகாவிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறார். ஆனால் அந்த காரில் அவர் மரணமடைந்த நிலையில் உடல் கிடக்கிறது. இதற்கு பின் என்ன நடக்கிறது? அந்த மரணத்திற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன? அந்த சம்பவத்தில் உதயநிதி எப்படி சிக்கினார்? அதற்கு பின் இருக்கும் பின் இருக்கும் பெரும் திட்டம் என்ன? என்பதே கண்ணை நம்பாதே.
ஒரு கொலையை மறைக்க இரண்டு நண்பர்கள் பல முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இதை திரில்லர் பட பாணியில் நிதானத்துடன் படமாக்கியுள்ளார் மு.மாறன். இந்தப் படம் 2 மணி நேரம் 12 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் சில கேள்விகள் நமக்கு இருந்தாலும், கதைக்கு தேவையில்லாத காட்சிகளை படத்தில் சேர்க்கவில்லை. இதனால் படம் எந்த இடத்திலும் சோர்வை ஏற்படுத்தவில்லை.
சில திரில்லர் படங்களின் ப்ளாஷ்பேக் காட்சிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்காது அல்லது வலுவில்லாத காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை ப்ளாஷ்பேக் காட்சிகள் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. மேலும் படத்தில் இடம்பெறும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தாமல் அடுத்தடுத்து நகர்ந்து சென்றுவிடுகின்றன.
இதில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும்சரியான முக்கியத்துவத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். இது தேவையில்லாத கதாபாத்திரம் என்று எதையும் சொல்ல முடியாது.
'கண்ணை நம்பாதே' திரில்லர் படம் என்ற பார்வைக்குள் நாம் சென்று விடுகிறோம். இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் சென்னை நகரில் திரும்பும் இடங்களில் எல்லாம் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் படத்தின் காட்சிகள் நடைபெறும் மூன்று இடங்களில் மட்டுமே சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன. மேலும் இரவு நேரங்களில் மக்கள் சாலைகளில் செல்வதே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் நண்பர்களை பிந்தொடரும் கதாபாத்திரம் எப்படி அவர்களுக்கு முன்பே சம்பவ இடங்களுக்கு செல்கிறது என்பதும் நமக்கு தோன்றுகிறது. எனவே, அந்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
உதயநிதி, பிரசன்னா, பூமிகா என நடிகர்களை பொருத்தவரையில் திரில்லர் படத்திற்கு தேவையான சீரியஸை காடிகளில் கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஒரு கொலையை பார்க்கும் இடங்களில் இவ்வளவுதான் அதிர்ச்சியா? என்றும் ஒரிரு இடங்களில் தோன்ற வைக்கிறது.
கண்ணை நம்பாதே படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகியவை பக்கபலமாக அமைந்துள்ளன. இவை இரண்டும் காட்சிகளை பார்வையாளர்களின் மனதிற்கு கடத்த உதவியுள்ளன.
இந்தப் படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் அதை எந்த இடத்திலும் நமக்கு நினைவுபடுத்தவில்லை. இப்போதும் ரசிக்கும் வகையிலேயே கண்ணை நம்பாதே உருவாக்கப்பட்டுள்ளது. மு.மாறனின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் பிடித்தவர்களுக்கு நிச்சயம் இந்த கண்ணை நம்பாதே படமும் பிடிக்கும். திரில்லர் பாணியில் வெளியாகியுள்ள இந்தப் படம் Decent Thriller வகையில் சேர்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Movie review